- தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை
- சென்னை தீவு
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- கூட்டுறவுத் துறை
- தீபாவளி
- தீபாவளி விழா
- தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை
சென்னை : சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை, வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்று சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் வாதிடும்போது, தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் இருந்து கூட்டுறவு சங்கத்திடம் மாற்றியுள்ளோம் என்று கூறி கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் முருகானந்தம் தரப்பில் மனுவை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை இன்று வெளியிட்டது. அதன்படி, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏலம் நடைபெற உள்ளது. வரிசை எண் 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு ரூ.2.25 லட்சமும், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு ரூ.4 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு ரூ.5.60 லட்சமும், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு ரூ.3 லட்சமும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் நாளை பகல் 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் மற்றும் ஏலம் அனைத்தும் தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் அருகில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் நடைபெற உள்ளது.
The post சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை!! appeared first on Dinakaran.