புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்களை குறிவைத்து மேலும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதில் 3 சர்வதேச விமானங்கள் வெவ்வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்திய விமான நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் நாள்தோறும் வந்தபடி உள்ளன. இதுவரை 170 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா நிறுவனங்களைச் சேர்ந்த மேலும் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. சமூக ஊடகங்கள் வழியாக இந்த மிரட்டல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் இண்டிகோ நிறுவனத்தின் 3 சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் தோகாவிலும், கோழிக்கோட்டில் இருந்து ஜெட்டா சென்ற விமானம் ரியாத்திலும், டெல்லியிலிருந்து ஜெட்டா சென்ற விமானம் மெதினாவிலும் தரையிறக்கப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். ஜெட்டா, ரியாத், மெதினா நகரங்கள் சவுதி அரேபியாவில் உள்ளன. தோகா கத்தார் நாட்டின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மேலும் 50 விமானங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: 3 சர்வதேச விமானங்கள் பாதிப்பு appeared first on Dinakaran.