புதுடெல்லி: ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம் நவம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் எவ்வித தடையுமின்றி பயனர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும்.
இதையடுத்து ஜீவன் பிரமான் அல்லது டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் வரும் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “2024ம் ஆண்டுக்கான பிரசாரம் நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 800 நகரங்கள், மாவட்டங்களில் நடத்தப்படும்.
இந்த ஆண்டு முகஅங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி 785 மாவட்டங்களில் 1.8 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் டக் சேவாக் ஊழியர்கள் மூலம் முகாம்களை நடத்தும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பதை எளிதாக்கம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஓய்வூதியர்களுக்கான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம் நவ. 1 தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.