- சில்வர் பீச்
- நாகை காமேஸ்வரம் கடற்கரை
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கடலூர் தேவனாம்பட்டினம்
- கடலூர் சில்வர் பீச்
- சென்னை மெரினா கடற்கரை
- வெள்ளி கடற்கரை,
- தின மலர்
சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், நாகை காமேஸ்வரம் கடற்கரையை மேம்படுத்துவதற்காக நீலக்கொடி திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்து இரண்டாவது பெரிய கடற்கரையாக கடலூர் சில்வர் பீச் விளங்குகிறது. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது சில்வர் பீச் தனது பொலிவை இழந்தது.
அங்கு வைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டும், சேதம் அடைந்தும் வீணாகின. மீண்டும் அங்கு படகு குழாம் அமைத்து படகு சவாரி தொடங்க வேண்டும். மேலும் சில்வர் பீச்சை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தற்போது சில்வர் பீச்சை மேம்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சில்வர் பீச்சில் நடைபாதை, நவீன கழிப்பறைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், சிறுவர் பூங்கா, அதில் சிறிய அளவிலான கலையரங்கம் மற்றும் மக்கள் நடைபாதையில் மின்விளக்கு வசதிகள் அமைக்கப்படும்.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக, நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. சுத்தமான மணல், தெளிவான நீர், சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் அனைத்து பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு, இதையெல்லாம் வழங்கும் கடற்கரை நீலக் கொடிக்கு தகுதி பெறும். தமிழகத்தில் கோவளம் கடற்கரையும், புதுச்சேரியில் ஈடன் கடற்கரையும் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளன.
இந்நிலையில் கடலூர் சில்வர் பீச்சுக்கும் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும், வேளாங்கண்ணியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது காமேஸ்வரம் கடற்கரை பகுதி. இந்த காமேஸ்வரம் காசியை விட புண்ணியம் நிறைந்த புனித பூமியாகும். காமேஸ்வரம் கடற்கரை நீலக்கொடி திட்டத்தில் சேர்க்க மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தூய்மையான கடற்கரையாக மாற்றப்பட உள்ளது.
இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய உதவி இயக்குநர் தமிழ்ஒலி கூறியதாவது: காமேஸ்வரம் கடற்கரையையும் நீலக்கொடி திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறை சார்பில் நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் காமேஸ்வரம் துறைமுகம் சிறந்த சுற்றுலா தலமாக மாறும் என்றார்.
The post சில்வர் பீச், நாகை காமேஸ்வரம் கடற்கரை நீலக்கொடி திட்டத்தில் விரைவில் சேர்ப்பு: சுற்றுலாவை மேம்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.