திருவாரூர், அக். 23: திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் மாற்றுதிறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பின்போது மருத்துவச்சான்று பெறாத மாற்றுத்திறனாளிகள், மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு கண்டறியப்பட்ட நபர்களுக்கும் புதிதாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று பெற விரும்பும் நபர்களுக்கும் மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படவுள்ளதால் தங்களது ஆதார் அட்டை மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை நகல், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டு www.swavlambancard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பதிவு செய்யப்படுபவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் முகாம் நடைபெறும் தேதி குறித்து தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அன்றைய தினம் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு அன்றைய தினமே மருத்துவச்சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைபெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.