×
Saravana Stores

நவம்பர் மாதம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கள ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நடத்துகிறார், திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் என உறுதி

நாமக்கல்: நவம்பர் மாதம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கள ஆய்வு செய்ய உள்ளேன். திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நாமக்கலில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். நாமக்கல் அருகே பொம்மகுட்டைமேட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.366 கோடியில் 140 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.298 கோடியில், 134 நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த சில நாட்களாக, நாம் பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டு ஆட்சி காலத்தில், நம்மால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எது எது நிறைவேற்றப்பட்ட பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பணிகள் அதையெல்லாம் துறைவாரியாக ஆய்வு கூட்டங்களை நான் நடத்திக்கொண்டு வருகிறேன். அதை இந்த மாதத்தில் முடித்துவிட்டு, அடுத்த நவம்பர் மாதம் தொடங்கி, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக நானே சென்று கள ஆய்வு செய்யப் போகிறேன். அதனால் தான் சொல்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும். கடந்த மூன்றாண்டுகால ஆட்சியில், பட்டியலினத்தவர், பழங்குடியினர், அருந்ததியர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள், ஏழை எளியோர், கோயில் அர்ச்சகர்கள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துச் சமூக மக்களையும் வளர்த்து வருகிறோம். எனக்கு தினமும் வாட்ஸ்அப்-இல் பல பேட்டிகள் வீடியோக்கள் வருகிறது.

மக்களின் அன்பும் பாராட்டுக்களும் நிறைந்த அந்த வீடியோக்களில் சிலவற்றை உங்களிடத்தில் நான் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மூதாட்டி சொல்கிறார். நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயில்தான் நான் மாத்திரை, மருந்து வாங்குகிறேன். ஒரு மாணவி சொல்கிறார். புதுமைப்பெண் திட்டத்தில் வரும் ஆயிரம் ரூபாயால் என்னுடைய கல்விக் கனவு நனவாகி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது நான் மூன்று இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோவுக்கு ஓனராக இருக்கிறேன் என்று திருநங்கை ஒருவர் பெருமையாக சொல்கிறார்.

மாற்றுத் திறனாளிகளை, ஸ்டாலின் கவர்மெண்ட், செல்லப் பிள்ளைகளாக பார்க்கிறது என்று ஒரு மாற்றுத் திறனாளி சகோதரி சொல்கிறார். எல்லாவற்றிற்கும் மேல், சென்னையில் மழை பெய்தபோது, நம்முடைய அரசு சிறப்பாக செயல்பட்டு, நிலைமையை கையாண்டது. அப்போது, அரசின் செயல்பாடுக்கு பெரும் துணையாக இருந்த தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, அவர்களோடு மதிய உணவு சாப்பிட்டேன். நீங்கள் எல்லாம் டிவியில் பார்த்திருப்பீர்கள். சோசியல் மீடியாவிலும் பார்த்திருப்பீர்கள்.

வாட்ஸ்அப், யூ-டியூப்பில் பார்த்திருப்பீர்கள். அப்போது ஒரு தூய்மைப் பணியாளர் என்னிடம் பேசினார். அப்போது அவர், “எங்கள் குடும்பத்தில் ஒருத்தர்தான் முதலமைச்சர்” என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு எனக்கு என்ன வேண்டும். ஊரைத் தூய்மைப்படுத்தும் உள்ளங்களோடு சாப்பிட்டதுதான் எனக்குப் பெருமை. இதுதான் “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னது. அண்ணா சொன்னதை தான், அவரின் தம்பிமார்களான நாங்கள் செய்து காட்டிக் கொண்டிருக்கிறோம்.

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதுடன் தொழில் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம். பெரிய பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் வளர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 10.69 விழுக்காடாக இருக்கும் என்று ஆய்வறிக்கையில் வெளியாகி இருக்கிறது. இது அகில இந்திய வளர்ச்சி அளவைவிட மிக மிக அதிகம். நிறைய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிப் பார்த்தால் அனைத்து மாவட்டங்களும் வளர்ந்திருக்கும்.

அனைத்துத் துறைகளும் வளர்ந்திருக்கும். அனைத்து சமூகங்களும் வளர்ந்திருக்கும். அந்த நிலையை உருவாக்கிக் காட்டுவதற்காகதான் நானும், நம்முடைய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சி அனைத்தும் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. அதன் மூலமாக பாராட்டுக்கள் கிடைக்கிறது. இவ்வாறு முதல்வர் பேசினார். முன்னதாக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.19.50 கோடியில் முதலைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள, நாமக்கல் மாநகராட்சி டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம், ரூ.114 கோடியில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் அரசு சட்டகல்லூரி, விடுதி, பள்ளி கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும் 3 பாலங்கள், 96 கட்டிடப்பணிகள், இணைப்புசாலைகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் உமா வரவேற்றார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிவேந்தன், ராஜேந்திரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமர் எம்பி, மாதேஸ்வரன் எம்பி, பிரகாஷ் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் நன்றி கூறினார். விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் சாதனை திட்டங்கள் குறித்த காணொலி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

* ஏடிஎம் கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
நாமக்கல் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசார் சந்தித்தனர். அவர்களை முதல்வர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நாமக்கல் எஸ்பி ராஜேஸ்கண்ணன், டிஎஸ்பிகள் இமையவர்மன், முருகேசன், ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தவமணி, ரங்கசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 23 போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். அப்போது, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

* நாமக்கல்லில் 8 அடி உயர கலைஞர் முழு உருவ சிலை முதல்வர் திறந்து வைத்தார்
நாமக்கல்-பரமத்தி சாலையில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 8 அடி உயரத்தில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று திறந்து வைத்து, சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சிலையின் பீடத்தின் மீது ஏறி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களை பார்த்து கையசைத்தார். இதைப்பார்த்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர். விழாவுக்கு வந்த முதல்வருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், கட்சியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

The post நவம்பர் மாதம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கள ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நடத்துகிறார், திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் என உறுதி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Namakkal ,Pommakuttaimet ,Dinakaran ,
× RELATED நாமக்கல் செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!!