×
Saravana Stores

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2023-2024 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2024-2025-இல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும். உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

மேலும் பணியாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று முதல் முறையாக குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களாக இருப்பினும் நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்கள் இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 43,683 பணியாளர்களுக்கு ரூ. 44 கோடியே 42 இலட்சம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன் எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்.

The post கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,CHENNAI ,Tamil Nadu government ,Tamil Nadu ,Central Co-operative Societies ,Dinakaran ,
× RELATED வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!