பொன்னை, அக்.22: பொன்னை ஆற்றில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் திறந்து விடப்படுவதால் நுரை பொங்கியபடி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதேபோல், ஆந்திர மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொன்னை ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மாநில எல்லையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனக்கழிவுகளை ஆற்றில் திறந்துவிட்டு விடுவதாக கூறப்படுகிறது. இதனால் பொன்னை அணைக்கட்டு பகுதியில் ஆற்று வெள்ளமானது கருப்பு நிறமாக நுரை பொங்கியபடி செல்கிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், மாதாண்டகுப்பம், கீரைச்சாத்து உட்பட பொன்னை ஆற்று கரையோர கிராமங்களில் நிலத்தடிநீர் பாதிப்படையும் அபாயம் உள்ளது. மேலும், நீர்நிலையில் உள்ள மீன்கள், பல வகையான தாவரங்கள் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து, ரசாயன கழிவுகளை ஆற்றில் திறந்து விடும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொன்னை ஆற்றில் நுரை பொங்கியபடி செல்லும் வெள்ளம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலப்பால் appeared first on Dinakaran.