×
Saravana Stores

திருக்கழுக்குன்றம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் மேல்நிலை தொட்டி: பொதுமக்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் புதிய குடிநீர் தொட்டியை, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கொத்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் மலைமேடு, மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு, போதிய குடிநீர் வசதி இல்லாததால் நீண்டதூரம் சென்று குடிநீர் மற்றும் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக தண்ணீர் கொண்டுவந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ – மாணவிகள் என அனைத்து தரப்பினரும் தினந்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், நெல்வாய் மலைமேடு மற்றும் மேலப்பட்டு கிராம மக்கள் தங்களது பகுதியில் புதிதாக சம்ப் எனப்படும் தரைமட்ட கிணறுடன் கூடிய புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இக்கோரிக்கையின்படி, 15வது நிதிக்குழு மானியத்தில் ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றுவதற்கான மின் மோட்டாரோ, தரைமட்ட கிணறோ அமைக்கப்படாததால் இதுவரை ரூ.17 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி வீணாக கிடக்கிறது.

எனவே, உடனடியாக தங்களது அத்தியாவசிய தேவையான குடிநீருக்கு வழிவகுக்கும் வகையில், கட்டி முடிக்கப்பட்டு சும்மாவே கிடக்கின்ற புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருக்கழுக்குன்றம் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக பயன்பாட்டிற்கு வராத குடிநீர் மேல்நிலை தொட்டி: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Chengalpattu District ,Thirukkalukkunram Union ,Kothimangalam ,Panchayat ,Nelwai Hills ,Melapatu ,
× RELATED நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வீடு...