×
Saravana Stores

பொன்னேரி முருகன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்: எம்எல்ஏ நடத்தி வைத்தார்

பொன்னேரி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் முருகன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ கோவிந்தராஜன் நடத்தி வைத்தார். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில், ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு இலவச திருமண நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதன் தொடக்கமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழை குடும்பங்களை சேர்ந்த 31 ஜோடிகளுக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு, 4 கிராம் பொன் தாலி, ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதில், கோயிலின் பரம்பரை அறங்காவலர் ராஜசேகர குருக்கள், திருவள்ளூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் லஷ்மிநாராயணன் மற்றும் செயல் அலுவலர் மாதவன், ராஜசேகர், சரவணன், பிராபாகரன், பாலாஜி ஆய்வர் கார்த்திகேயன், ஸ்ரீதர், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூரைச் சேர்ந்த பாண்டி மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த லட்சுமி ஆகியோருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள் மற்றும் 4 கிராம் தங்கம் உள்பட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை வழங்கி மணமக்களை வாழ்த்தினர். இதில் கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post பொன்னேரி முருகன் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்: எம்எல்ஏ நடத்தி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Ponneri Murugan Temple ,MLA ,Ponneri ,Kummidipoondi ,TJ Govindarajan ,Andarkuppam Murugan Temple ,Hindu Religious Charities Department ,Tamil Nadu Government Hindu Religious Welfare Department ,
× RELATED மதுராந்தகம் எம்எல்ஏவின் மாமனார் உடல்...