புதுடெல்லி: அயோத்தி தீர்ப்புக்காக கடவுள் முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்தேன் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சொந்த ஊருக்கு சென்றார். அங்கு மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு சில வழக்குகளை தீர்க்க பல்வேறு யோசனைகளை பெறுகிறார்கள். ஆனால் எப்போதும் அப்படி தீர்வுக்காக செல்வதில்லை. எனக்கும் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சையின் போது இதேபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது.
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்கு பிரார்த்தனை செய்தேன். தீர்ப்பை அறிவிப்பதற்கு முன், கடவுள் நம்பிக்கை அடிப்படையில் ஒரு வழியை கண்டேன். ஏனென்றால் 3 மாதமாக இந்த குழப்பம் நீடித்தது. இந்த குழப்பம் தீர்வதற்கு நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, அவர் ஒரு தீர்வை தர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அதன் அடிப்படையில் தீர்வு கிடைத்தது. நான் தவறாமல் பிரார்த்தனை செய்கிறேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் உங்களுக்கு ஒரு வழியை தருவார். இவ்வாறு அவர் பேசினார்.
அயோத்தி ராமர் கோயில் பிரச்னையில் 2019 நவம்பர் 9 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சந்திரசூட் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கி 70 ஆண்டுகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடந்தது. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சந்திரசூட் கடந்த ஜூலை மாதம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று அங்கு பிரார்த்தனை செய்தார்.
The post அயோத்தி தீர்ப்புக்காக கடவுள் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன்: தலைமை நீதிபதி சந்திரசூட் தகவல் appeared first on Dinakaran.