புதுடெல்லி: டெல்லியில் ரோகினி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே நேற்று முன்தினம் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், குண்டு வெடித்த பகுதியின் அருகில் இருந்த வாகனங்கள், கடைகளின் ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவை அதிர்வில் உடைந்து சிதறின. குண்டு வெடித்த இடத்திலிருந்து வெள்ளை நிற பவுடர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு, கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேசிய பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகளும் தடயங்களை சேகரித்த நிலையில், சிஆர்பிஎப் படையினரும் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக நேற்று முன்தினம் இரவு டெலிகிராம் ஆப்பில் ஒரு பதிவு வேகமாக பரவியது. ‘ஜஸ்டிஸ் லீக் இண்டியன்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த குழுவில் குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோவுடன், ‘‘கோழைத்தனமான இந்திய ஏஜென்சியும் அதன் மேலிடமும் கையாலாகாத கூலிப்படையை ஏவி காலிஸ்தான் ஆதரவாளர்களை இலக்காக்கி எங்களின் குரலை ஒடுக்கிவிடலாம் என நினைத்தால் அவர்கள் முட்டாள்தனமான உலகில் வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
நாங்கள் எவ்வளவு நெருக்கமாக அவர்களை நெருங்கியிருக்கோம், எந்த நேரத்திலும் அவர்களை தாக்கக் கூடிய அளவில் எங்களின் முழு திறன் என்ன என்பதை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. காலிஸ்தான் ஜிந்தாபாத்’’ என பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி குண்டுவெடிப்பு பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த டெலிகிராம் குழுவை உருவாக்கியது யார், பதிவிட்டவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை தருமாறு டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் குண்டுவெடிப்பு நடந்திருப்பதால் டெல்லி போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
The post டெலிகிராம் பதிவால் பரபரப்பு; டெல்லி குண்டுவெடிப்புக்கு பின்னணியில் காலிஸ்தான் அமைப்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.