சென்னை: சியட் டயர் நிறுவனம், சென்னையில் டயர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தற்போதுள்ள ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள சியட் டயர் உற்பத்தி நிறுவனம் தனது ஆலையை விரிவாக்கம் செய்து வருகிறது. சென்னையில் உள்ள ஆலை தற்போது மாதத்துக்கு 45,000 டிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது குறித்து இதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அர்னாப் பானர்ஜி கூறியதாவது: டயர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்து வருகிறோம். டிரக் மற்றும் பஸ் ரேடியல் டயர்கள் (டிபிஆர்) உற்பத்தியை பொறுத்தவரை முதல் கட்ட உற்பத்தி விரிவாக்கப் பணிகள் கடந்த காலாண்டில் முடிந்து விட்டன.
அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகள், இன்னும் 6 முதல் 9 மாதங்களில் நிறைவு பெறும். பயணிகள் கார்களுக்கான ரேடியல் டயர்கள் (பிசிஆர்) உற்பத்தியையும் அதிகரித்து வருகிறோம். தற்போதுள்ள ஆலை, நாள் ஒன்றுக்கு 20,000 டயர்கள் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கிறது. இதனை இன்னும் 30 முதல் 40 சதவீதம் கூடுதல் உற்பத்தி திறன் கொண்டதாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இப்பணிகள் முடிவடைந்தால், நாள் ஒன்றுக்கு 27,000 முதல் 28,000 பிசிஆர் டயர்களை உற்பத்தி செய்ய முடியும். சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் இந்த ஆண்டில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக இவை மேற்கொள்ளப்படுகின்றன.
The post சென்னை ஆலையை விரிவாக்கம் செய்கிறது சியட் டயர் நிறுவனம் appeared first on Dinakaran.