திருப்புத்தூர்: திருப்பத்தூர் அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே குறுவாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (65). விவசாயியான இவர் தனது தோப்பில் அரசு அனுமதி பெற்று சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். கடந்த அக்.16ம் தேதி இரவு இவரது தோப்பில் இருந்து 3 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த அக்.19ம் தேதி அவரது தோப்பில் இருந்து மேலும் 8 சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து பாண்டியன் கூறியதாவது: எனது கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் நிலத்தில் நெல், வெட்டிவேர் விவசாயம் செய்து வருகிறேன்.
மேலும், எனது தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்த்து வருகிறேன். தற்போது இங்கிருந்து அடுத்தடுத்து இரண்டு முறை சந்தனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். அவர்கள் கடத்தி சென்ற சந்தன மரங்களை சுமார் 1 கிமீ தொலைவில் உள்ள கண்மாய் பகுதியில் வைத்து பார்த்துள்ளனர். அதில், அதிக விலைமதிப்புள்ள வைரம் பாய்ந்த மரங்களை மட்டும் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சிய சுமார் 30 கிலோ மரங்களை விட்டுச் சென்றுள்ளனர். காவல்துறை அதிகாரியுடன் அங்குசென்று அந்த மரங்களை எடுத்து வந்தேன். வெட்டி கடத்தப்பட்ட மரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும். இதுகுறித்து கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார். சந்தன மரங்கள் கடத்தல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்புத்தூர் அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.