×
Saravana Stores

ஓலை வெட்டுவதற்காக ஏறியபோது 40 அடி உயர தென்னை மரத்தில் தலைகீழாக தொங்கிய தொழிலாளி: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஓலை வெட்டுவதற்காக 40 அடி உயர தென்னை மரத்தில் ஏறியபோது எந்திரத்தில் கால் சிக்கி நீண்ட நேரம் தலைகீழாக தொங்கிய தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி அருகே பழூர் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (41). தென்னை மரம் ஏறும் தொழிலாளி ஆவார். நேற்று அங்குள்ள ஒரு 40 அடி உயர தென்னையில் ஓலை வெட்டுவதற்காக எந்திரத்தின் உதவியுடன் ஏறினார். எந்திரத்தில் நின்றபடி ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது இடது கால் எந்திரத்திற்குள் சிக்கியது.

இதனால் பதற்றத்தில் அவரது கைகள் நழுவின. இதனால் சுமார் 10 நிமிடத்திற்கும் மேல் அவர் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார். இப்ராகிமின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்த மரம் வெட்டும் தொழிலாளியான சுதீஷ் மரத்தில் ஏறினார். பின்னர் இப்ராகிமின் தலையை தனது தோளால் தாங்கிப் பிடித்து அவரது உடலை மரத்துடன் சேர்த்து ஒரு கயிறால் கட்டினார்.

சுமார் 20 நிமிடம் இப்ராகிமை சுதீஷ் தாங்கிப்பிடித்தபடி மரத்தில் நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே அந்த பகுதியினர் பத்தேரி தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து வந்து ராட்சத ஏணியை பயன்படுத்தி மிக சாதுர்யமாக இப்ராகிமை கீழே இறக்கினர். மரம் வெட்டும் தொழிலாளி சுதீஷ் சமயோசிதமாக செயல்பட்டதால் தான் இப்ராகிமுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

The post ஓலை வெட்டுவதற்காக ஏறியபோது 40 அடி உயர தென்னை மரத்தில் தலைகீழாக தொங்கிய தொழிலாளி: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Wayanad ,Patheri, Wayanad District, Kerala State ,
× RELATED சிறுபான்மை சமூகங்கள் மீது வெறுப்பை...