×
Saravana Stores

தீபாவளி பண்டிகை.. தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்- புகார் அளிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர்!!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

தீபாவளி – 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும். அக்.28 முதல் 30 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2910 அரசு பேருந்துகளை இயக்கப்படும். 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சுமார் 5.83 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 2 முதல் 4ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 9,441 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். தீபாவளி பண்டிகை முடித்து திரும்ப வருவதற்கு 12,846 பேருந்துகள் இயக்கப்படும்.

3இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்துக்கு 24 மணி நேரமும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் 5 இடங்களுக்கு பதில் இந்த முறை கோயம்பேடு, மாதவரம், கிளம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் இருந்து தீபாவளிக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும். சென்னையில் போதுமான அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த ஆண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
கடந்த இரண்டு ஆண்டுகளைவிட கூடுதல் பேருந்துகள் இந்த ஆண்டில் இயக்கப்படும். சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடக்கப்பட்டுள்ளது. 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 1.02 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு பேருந்துகள் செல்லும் மார்க்கம்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர், காஞ்சிபுரம், வேலூர், பெங்ளூரூ, திருத்தணி மார்க்கமாக செல்லும். மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஆந்திரா மார்க்கமாகவும், திருச்சி, சேலம் மார்க்கமான பேருந்துகளும் புறப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கும்பகோணம் மார்க்கமாக இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகார் அளிக்கலாம்
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக 18004256151,044 26280445 எண்களில் புகார் அளிக்கலாம். மேலும், கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் மையங்களிலும் புகார்களை அளிக்கலாம். கட்டண விவகாரம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் வரும் 24-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்படும். ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு போக்குவரத்துக்கழகம் தனியார் மயமாக்கப்படாது
தேவைக்கேற்ப தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு 7,200 பேருந்துகள் வாங்கப்படுகின்றன. போக்குவரத்து கழகத்தை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. பல்வேறு தனியார் நிறுவனங்கள் பேருந்துகள் இயக்கத்தை நிறுத்திவிட்டன. சென்னையில் இருந்து அக்.28இல் 2,792 பேருந்துகள், அக்.29இல் 4,217 பேருந்துகள், அக். 30இல் 4,167 பேருந்துகள் இயக்கப்படும்.

காரில் சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு
காரில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருப்போரூர், செங்கல்பட்டு மற்றும் வண்டலூர் வெளிச்சுற்று சாலையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

The post தீபாவளி பண்டிகை.. தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்; ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்- புகார் அளிக்கலாம்: அமைச்சர் சிவசங்கர்!! appeared first on Dinakaran.

Tags : Diwali Festival ,Tamil Nadu ,Minister ,Sivasankar ,Chennai ,Transport ,Chennai Chief Secretariat ,Sivashankar ,Diwali Special Buses Movement ,Dinakaran ,
× RELATED தீபாவளிப் பண்டிகை; தமிழ்நாட்டின்...