வாரணாசி: கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இதனால், சில விமானங்கள் பாதி வழியிலேயே அவசரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வந்த அனைத்து மிரட்டல்களும் வெறும் புரளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் சம்பவங்கள் நாடு முழுவதும் விமான பயணிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசும், விசாரணை அமைப்புகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதில் விஸ்தாரா, இண்டிகோ, ஏர் இந்தியா நிறுவனங்களை சேர்ந்த தலா 6 விமானங்கள் இருந்தன. மிரட்டலுக்கு உள்ளான விமானங்களில் சோதனை நடத்தப்பட்டதில், அவை அனைத்தும் புரளி என தெரியவந்தது.
இதற்கிடையே சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதை சோதனை செய்தபோது புரளி என தெரியவந்தது. இவ்வாறு 24 விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் மூலம் இதுவரை மிரட்டலுக்கு உள்ளான விமானங்களின் எண்ணிக்கை 90ஐ கடந்துள்ளது. இதுதொடர்பாக பொது விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் (பிசிஏஎஸ்) விமான நிறுவன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.
இந்நிலையில், விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் புரளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கிறது. மிரட்டல் அழைப்புகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம். உளவுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை மூலம் மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் ராம் மோகன் உறுதி அளித்தார்.
The post ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம் appeared first on Dinakaran.