×

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை

நெல்லை: நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக சம்மன் அனுப்பி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நெல்லையில் ஜல் நீட் அகாடமி’ என்ற கேரளாவைச் சேர்ந்த தனியார் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தினமும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு பயிலும் மாணவர்கள் பிரம்பு கம்பாலும், மாணவிகளை நோக்கி காலணிகளை வீசிய விடியோ காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பயிற்சியாளர், சரியாக படிக்கவில்லை என்று கூறி மாணவர்களை வரிசையாக வரவழைத்து தாக்கி உள்ளார். இதில் மாணவர்களுக்கு முதுகு உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

இந்த மையத்தில் காலணிகளை வைப்பதற்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சரியாக அடுக்கி வைக்கப்படாத காலணிகளை கையில் எடுத்து வந்த பயிற்சியாளர் பயிற்சி வகுப்பில் உள்ள மாணவர்களிடம் கேட்டுள்ளார். ஒரு மாணவி இது தன்னுடையது என எழுந்து கூற அந்த காலணிகளை மாணவியை நோக்கி தூக்கி வீசுவது அந்த மாணவி காலணிகளை கையால் தூக்கி செல்லும் வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் தாழையூத்து பகுதியை சேர்ந்த அமீர் உசேன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் பயிற்சி மையத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமீர் உசேன் பயிற்சி மையத்தில் நடக்கும் இந்த கொடூர சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் அகாடமியின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அகமத் வெட்டியாடன் மீது மாணவர்களை தாக்குதல், செருப்பால் அடித்தல், சிறார் நீதிச்சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரம் அறிந்த அந்த மையத்தின் பயிற்சியாளர் கேரளாவுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்காக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நெல்லை சென்றார். அவர் நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பாக வெளியான தகவலை அறிந்தார்.

அங்கு தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்களை தனித்தனியாக வரவழைத்து விசாரணை நடத்தினார். அவர்களது உடலில் ஏற்பட்ட காயங்களை பார்வையிட்டு, தாக்கப்பட்ட விவரத்தை கேட்டறிந்தார். அங்கிருந்த ஊழியர்கள், மற்ற பயிற்சியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். இந்த நிலையில், நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவின் பேரில் சம்மன்கள் அனுப்பப்பட்டன. அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. மாணவர்கள் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில் மேல் நடவடிக்கை பாயும் என போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Paddy Nate training centre ,Nella ,Paddy ,Need Training Centre ,Neat Training Centre ,Kerala ,Jal Neet Academy ,Rice Needle Training Centre ,Dinakaran ,
× RELATED திருநெல்வேலியில் பாதுகாப்புப் படை...