அரியலூர், அக். 21: அரியலூர் அடிப்படை வசதிக்காக எம்.ஜி.ஆர் நகர் பகுதி குடியிருப்பு வாசிகள் காத்திருக்கின்றனர். முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரியலூர் நகர்பகுதியில் கல்லங்குறிச்சி சாலை பகுதியில் உள்ளது எம்ஜிஆர் நகர் குடியிருப்பு, கடந்த 40 ஆண்டகளுக்கும் மேலாக பூர்வ குடியாக வசித்து வரும் இவர்களுக்கு ரேஷன் அட்டை,வீட்டு மின் இணைப்பு வசதி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூர் நகர் பகுதி 10 வது வார்டு பகுதிக்கு உட்பட்டு சுமார் 60 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் சிறு மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் குடியிருப்ப பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துகொள்வதால் மிகுந்த இன்னல்களுக்கு உட்படுகின்றனர்.
அரியலூர் சந்தைப்பேட்டை காவலர் குடியிருப்பு போன்ற பகுதிகளில் இருந்து வரும் மழை வெள்ள நீர்வரத்து அடைக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துகொண்டு இயல்புநிலைக்கு வர பல நாட்கள் ஆகின்றன. இதற்கான தீர்வுக்காக கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை இப்பகுதி நிலை குறித்து கோரிக்கை வைத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே தற்போதைய மாவட்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு சாலைவசதி, தூய்மையான குடிநீர்வசதி, வடிகால் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு உரிய தீர்வு காணவேண்டும் என்று எதிர்பார்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
The post அரியலூர் அடிப்படை வசதிக்காக எம்.ஜி.ஆர் நகர் பகுதி குடியிருப்பு மக்கள் காத்திருப்பு appeared first on Dinakaran.