நெல்லை, அக். 21: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை எடுக்க நெல்ைல டவுனில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ரதவீதிகளில் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். நெல்லை, டவுனில் உள்ள வடக்கு ரதவீதி முழுவதும் ஜவுளிக்கடைகள் அதிகமாக உள்ளன. தரமான ஆடைகள் குறைந்த விலையில் கிடைப்பதால் பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகரிக்கும்.
நாடு முழுவதும் வரும் 31ம்தேதி தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாத்துடன் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பலர் தங்களது குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் புத்தாடைகள் எடுக்க நெல்லை டவுனுக்குச் சென்றனர்.
பண்டிகைக் காலம் என்பதால் பிரபல ஜவுளிகடைகள் மூலம் சாலையோர ஜவுளிகடைகள் வரை சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ளன. இதனால் அங்குள்ள சாலையில் கூட்டம் அலைமோதியது. டவுன் வடக்கு ரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி ஆகிய நான்கு ரத வீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நெல்லை டவுனில் உள்ள ஜவுளி கடைகளில் புத்தாடை விற்பனை நேற்று களை கட்டியது.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக ரதவீதிகளில் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் கூட்டத்தில் திருடர்கள் நடமாட்டம் உள்ளதா? என போலீசார் கண்காணித்தனர். மேலும் கூட்டத்தில் கைவரிசை காட்டுபவர்களை பிடிக்க போலீசார் சாதாரண உடையில் தயார் நிலையில் ஆங்காங்கே பொதுமக்களுடன் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை எடுக்க நெல்லை டவுனில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.