- வெஸ்டர்ன் பைபாஸ்
- நெல்லை
- நாகர்கோவில்
- தென்காசி
- சங்கரன்கோவில்
- மதுரை
- நெல்
- மேற்கு விரைவுச்சாலை
- நெல்லை மாவட்டம்
- தென்காசி
- தின மலர்
நெல்லை, அக். 21: நெல்லை மாவட்டத்தில் 3 கட்டமாக மேற்கொள்ளப்படும் மேற்குப்புறவழிச்சாலை திட்டப்பணி விரைவில் துவங்க உள்ளது. இதற்கான டெண்டர் நவ.11ம் தேதி கோரப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நெல்லை – நாகர்கோவில், நெல்லை – தென்காசி, நெல்லை – சங்கரன்கோவில், நெல்லை – மதுரை, சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.350 கோடியில் மேற்கு புறவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 2022ம் ஆண்டு செப்.8ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடந்து வருகிறது. இதற்காக இந்தச் சாலை பணிகளை மூன்று கட்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தாழையூத்தில் துவங்கி கொங்கந்தான்பாறை விலக்கில் முடியும் வரையில் நெல்லை நகருக்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இச்சாலையின் மொத்த நீளம் 31.788 கி.மீ ஆகும். இந்த சாலை நெல்லை நகரில் இருந்து செல்லும் முக்கிமான நான்கு மாநில நெடுஞ்சாலைகளான ராஜபாளையம் – சங்கரன்கோவில் – நெல்லை சாலை (SH41), நெல்லை – செங்கோட்டை – கொல்லம் சாலை (SH 39), நெல்லை – பொட்டல் புதூர் சாலை (SH41A), திருச்செந்தூர் – பாளையங்கோட்டை – அம்பை – குற்றாலம் – செங்கோட்டை சாலை (SH40) ஆகியவற்றை இணைத்து அமைய உள்ளது. இவ்வாறு இந்த புறவழிச்சாலை அமைப்பதன் மூலம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பொட்டல்புதூர், சங்கரன்கோவில், தென்காசி முதலான ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் வள்ளியூர், நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், மற்றும் மதுரை ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கு, நெல்லை நகருக்குள் நுழையாமல் புறவழிச்சாலையை பயன்படுத்துவதால், நெல்லை நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இதனால் நெல்லை மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பயனடைவார்கள். இப்பணியை 3 கட்டங்களாக செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சுத்தமல்லி (நெல்லை – பொட்டல்புதூர் சாலை) முதல் கொங்கந்தான்பாறை விலக்கு வரை 12.20 கி.மீ நீளமுள்ள பகுதியாகும். இதற்கான நில எடுப்பு முடிவடைந்து, சிஆர்ஐடிபி திட்டத்தில் செயலாக்கத்திற்கான அரசின் நிர்வாக ஒப்புதல் ரூ.180 கோடிக்கு கடந்த ஆக. 13ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரும் நவ.11ம் தேதி கோரப்படுகிறது. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இதேபோல் 2வது கட்டமாக ராமையன்பட்டி ( ராஜபாளையம் – சங்கரன்கோவில் – நெல்லை சாலை) முதல் சுத்தமல்லி (நெல்லை – பொட்டல்புதூர் சாலை) வரை 12.20 கி.மீ நீளமுள்ள பகுதியாகும். இதற்கான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தொழில்நுட்ப பரிசீலனையில் உள்ளது. விரைவில் அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் துவங்கப்படும்.
3வது கட்டமாக தாழையூத்து முதல் ராமையன்பட்டி (ராஜபாளையம் – சங்கரன்கோவில் – நெல்லை சாலை) வரை 7.50 கி.மீ நீளமுள்ள பகுதியாகும். இதில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் சில மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி திருத்திய நேர்பாடு செய்யபட்டதன் காரணமாக தாழையூத்து கிராமத்தில் கூடுதல் நில எடுப்புக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. நில எடுப்பு இறுதி கட்டத்தை எட்டியவுடன் அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு புறவழிச் சாலை திட்டப் பணிகள் துவங்கி முழுமையாக நிறைவு பெறும்போது நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். மேலும் நெல்லை மாநகரை கடந்து பிற பகுதிகளுக்கு தொலைதூரம் பயணிப்பவர்கள் பயண நேரமும் குறைய வாய்ப்பு உள்ளது என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நெல்லை – நாகர்கோவில் – தென்காசி – சங்கரன்கோவில் – மதுரை சாலைகளை இணைக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் துவக்கம்: 3 கட்டமாக நடத்தி முடிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.