ராமநாதபுரம், அக்.21: திருவாடானை பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழையால், 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டு விட்டதால், நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த வேளாண் பண்ணைத் திட்டத்தின் கீழ் மானிய திட்டத்தில் பழ கன்றுகளும், முதலமைச்சரின் நுண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் வேம்பு மரக்கன்றுகளும் என 100 விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் வழங்கினார். கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துகளையும் கலெக்டரிடம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கம் முத்துராமு: திருவாடானை பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட சுமார் 15 நாட்கள் வளர்ந்த நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. எனவே அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார். இதுபோன்று பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான பட்டா 10(1), சிட்டா, அடங்கல் உள்ளிட்ட மூவிதழ் சான்றிதழ்களை தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.தரைக்குடி பகுதியில் கடந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மான், காட்டுப்பன்றியால் பயிர்கள் பாதிக்கப்படும் போது தாமதமின்றி இழப்பீடு வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம், பரளையாறு, ஊரணி, கண்மாய் தூர்வாருதல், விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்குவது, தடுப்பணை கட்டுதல், கிராம பகுதிகளுக்கு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.
சாலைகள் சீரமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். விவசாய பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகளுக்கு துறைவாரியாக அலுவலர்கள் பதிலளித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து கலெக்டர் கூறும்போது, விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் திட்டங்கள் ஒவ்வொன்றும் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு வேளாண்மைத் துறை அலுவலர்களை நியமித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் அனைத்து கால்வாய்களிலும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களை தூர்வாறும் பணிகளை மேற்கொள்ளப்படும். கிசான் விகாஸ் கடன் அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிளகாய் மற்றும் பருத்திக்கு வேளாண்மை விற்பனை துறை மூலம் சந்தைப்படுத்தப்படும். மேலும் குளிர்சாதன கிடங்குகளில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைத்து தேவையான நேரத்தில் அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட வேண்டும் என்றார். மேலும் பருவமழை தொடங்கியுள்ளதால் வேளாண் அலுவலகங்களில் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்களை இருப்பு வைத்திட வேண்டும்.
தனியார் உரக்கடைகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் கட்டணத்திற்கு விற்பனை செய்வதாக புகார் வந்தால், வேளாண்மை துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் ஜூனு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக சஙஉதவியாளர்(பொ)பாஸ்கரமணியன், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வேண்டும்: விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.