×

பத்மநாபசுவாமி கோயிலில் பூஜை பாத்திரம் மாயம்: டாக்டர், மனைவி உள்பட 3 பேர் பிடிபட்டனர்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வெண்கலப் பாத்திரம் கடந்த சில நாட்களுக்கு முன் மாயமானது. இது தொடர்பாக கோயில் நிர்வாகிகள் திருவனந்தபுரம் போர்ட் போலீசில் புகார் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்ததில் 2 பெண்களுடன் வந்த ஒருவர் அந்த பாத்திரத்தை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த ஓட்டல் குறித்த விவரங்கள் தெரியவந்தன. ஓட்டலில் நடத்திய விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் போலீசார் ஹரியானா மாநில போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

குருகிராம் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டு நடத்திய கணேஷ் ஜா, அவரது மனைவி மற்றும் தங்கை ஆகிய 3 பேர் பிடிபட்டனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த டாக்டரான கணேஷ் ஜா ஆஸ்திரேலிய நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர் ஆவார். இவர்கள் பிடிபட்ட விவரத்தை ஹரியானா போலீசார் திருவனந்தபுரம் போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து திருவனந்தபுரம் போர்ட் போலீசார் ஹரியானா சென்று அவர்களை நேற்று திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கையில் பூஜை தட்டுடன் திடீரென கணேஷ் ஜா மயங்கி விழுந்தபோது, கீழே விழுந்த பொருட்களை எடுத்த போது தவறுதலாக கோயில் பாத்திரத்தையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவர்களை விடுவிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post பத்மநாபசுவாமி கோயிலில் பூஜை பாத்திரம் மாயம்: டாக்டர், மனைவி உள்பட 3 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Padmanabhaswamy ,Thiruvananthapuram ,Padmanabhaswamy temple ,Thiruvananthapuram Port Police ,
× RELATED திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை...