×
Saravana Stores

நாடு முழுவதும் தொடர்ந்து வரும் மிரட்டல்கள் சென்னை விமான நிலையம், 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் மத்தியில் பெரும் அச்சம்

சென்னை: கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகம் மற்றும் 5 விமானங்கள் உட்பட நாடு முழுவதும் 24 விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இதனால், சில விமானங்கள் பாதி வழியிலேயே அவசரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை வந்த அனைத்து மிரட்டல்களும் வெறும் புரளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தமானில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று பகல் 1 மணிக்கு சென்னை வந்தது. இந்த விமானம் மீண்டும் மாலை 3 மணிக்கு, அந்தமானுக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில், சென்னையில் இருந்து அந்தமான் செல்வதற்காக 99 பயணிகள், சென்னை விமான நிலையம் வந்து இருந்தனர்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு, நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் அந்தமான், டெல்லி, புனே, கோவா மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ள விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை வெடித்து சிதறும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அதிர்ச்சியடையந்த அலுவலர்கள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து அந்தமானுக்கு மட்டுமே இயக்குகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கோவா, புனே ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் கிடையாது. எனவே, சென்னையில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு, அந்தமான் புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தை உடனடியாக சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்பேரில், அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் யாரையும் ஏற்றாமல், விமானம் தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் விமானத்தில் தீவிரமாக சோதனை நடத்தினர். மேலும் சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதி மற்றும் பயணிகள் தங்கி இருக்கும் இடங்கள் ஆகிய இடங்களிலும் தீவிர சோதனைகள் நடந்தன.

ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லாததால், இது வதந்தி என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த விமானம் புறப்படுவதற்கு விமான பாதுகாப்புத்துறை அனுமதி அளித்தது. அதன்பேரில், பயணிகள் 99 பேருடன், மாலை 4.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல, நாடு முழுவதும் நேற்று 24 இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதில், இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியாவின் தலா 6 விமானங்களுக்கு மிரட்டல்கள் வந்தன. இண்டிகோ விமானங்களில் பல வெளிநாடுகளுக்கு சென்றவை. மிரட்டல்களைத் தொடர்ந்து உடனடியாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், சம்மந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் பெலகாவியில் உள்ள விமான நிலையத்திற்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று முன்தினம் 2 மிரட்டல்கள் வந்த நிலையில் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. கடந்த ஒருவாரத்தில் இதுவரை சுமார் 100 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

ஆனால் யார் இவ்வாறு புரளி கிளப்புவது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், மிரட்டல் விடுப்பவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதும் விமான பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

* கடந்த ஒருவாரத்தில் இதுவரை சுமார் 100 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன

* சமூக ஊடகங்கள் வழியாக மிரட்டல்
பொதுவாக இமெயில், போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில், தற்போது பெரும்பாலான மிரட்டல்கள் சமூக ஊடகங்கள் வழியாக விடுக்கப்பட்டவை. ஒன்றிரண்டு சம்பவங்களில் மட்டுமே விமானங்களின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் துண்டு சீட்டுகள் கிடைத்துள்ளன.

எனவே, இதில் இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் செயல்படும் அமைப்புகள் சம்மந்தப்பட்டிருக்குமா அல்லது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதுதொடர்பாக பொது விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் (பிசிஏஎஸ்) விமான நிறுவன தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது.

The post நாடு முழுவதும் தொடர்ந்து வரும் மிரட்டல்கள் சென்னை விமான நிலையம், 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் மத்தியில் பெரும் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சோகம் 40 அடி...