சேலம்: அனைவருக்குமான பொற்கால ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு, கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை நேரு கலையரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 707 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும், கலைஞர் விளையாட்டு உபகரணங்களை கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அத்துடன், 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: துணை முதல்வராக முதல் முறையாக சேலம் வந்து கலைஞர் விளையாட்டு உபகரணத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலம் முழுவதும் 12,575 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 26 மாவட்டங்களில் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இன்று சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. இந்தவிழாவில் பாராலிம்பிக் வீரர்கள் தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன் இருவரும் விஐபிக்களாக பங்கேற்றுள்ளனர். இவர்கள் தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இது பலருக்கும் ஊக்கமளித்து வருகிறது. விழாவில் பேசிய துளசிமதி, மாரியப்பன் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக கூறினார். எனக்கு இன்ஸ்பிரேஷனாக தற்போது துளசிமதி உள்ளார். இவர்களை போல பலநூறு பேரை உருவாக்க முதலமைச்சர் கோப்பை விளையாட்டுக்காக ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 36 வகை போட்டிகள் நடத்தப்பட்டது.
கடந்த முறை 6 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில், இந்த வருடம் 11 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இதுவே இந்த திட்டம் வெற்றியடைந்ததற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. முதல்வர் கடந்த 3 ஆண்டுகளில் 3350 பேருக்கு ரூ.110 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசு பணி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, மகளிர் உள்பட அனைவருக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் பொற்கால ஆட்சியாக உள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் தற்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.96 ஆயிரம் கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. விடியல் பயணம் திட்டம் மூலம் மகளிர் 530 கோடி பயணம் மேற்கொண்டுள்ளனர். காலை உணவுத் திட்டத்தில் தினமும் 20 லட்சம் குழந்தைகள், புதுமைப் பெண் திட்டத்தில் 3 லட்சம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.16 கோடி பேர் மாதம் தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.
முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக, வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பட்டாக்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவது போல், நகர்புறங்களுக்கு விரிவுப்படுத்தப்படும். இன்று காலை செல்போனில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர், சேலத்திற்கு வரும் போதெல்லாம் பல கோரிக்கைகள் விடுக்கின்றனர். அதில் சேலத்தில் விளையாட்டு வீரர்கள் தங்கி படிக்க விடுதி வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் என்றார். அந்த அடிப்படையில் 60 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில், ரூ.7 கோடியில் விரைவில் விளையாட்டு விடுதி அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாரியப்பன் தங்கவேலு, பேட் மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அமைச்சர்கள் மதிவேந்தன், ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். செல்வகணபதி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம்;
சேலம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டியில் உள்ள தீர்த்தமலை திருமண மண்டபத்தில் இன்று மாலை திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
The post அனைவருக்குமான பொற்கால ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.