சென்னை: கனமழை பெய்த நாட்களில் 24 மணி நேரமும் இயங்கிய கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம், 3 நாட்களில் மட்டும் 2616 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 8 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடிநீர் பகிர்மான நிலையங்கள், 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
கழிவுநீர் அகற்றுவதற்காக 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 597 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக உரிமம் பெற்ற 90 கழிவுநீர் ஊர்திகள் பணியமர்த்தப்பட்டு மொத்தம் 687 கழிவுநீரகற்று வாகனங்கள் கழிவுநீரகற்று பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்குட்ட 15 மண்டலங்களில் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டனர். மேலும், அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்கள் தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அனைத்து கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலுள்ள 1063 பம்புகள் மற்றும் 267 டீசல் ஜெனரேட்டர்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கூடுதலாக வாடகைக்கு 102 டீசல் ஜெனரேட்டர்கள் பணியமர்த்தப்பட்டன. சென்னையில் உள்ள 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 668 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி 936.56 மில்லியன் லிட்டர், 17ம் தேதி 841.02 மில்லியன் லிட்டர், 18ம் தேதி 838.52 மில்லியன் லிட்டர் என 3 நாட்களில் மட்டும் மொத்தம் 2616.28 மில்லியன் லிட்டர் (அதாவது மூன்று மடங்கு அதிகமான நீர்) சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கனமழையின்போது 24 மணி நேரமும் இயங்கிய உந்து நிலையங்கள் 3 நாட்களில் 2616 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்து வெளியேற்றம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.