திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கடந்த இரு தினங்களாக 6 மணிநேரத்திற்கும் மேல், வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நாளை (21ம் தேதி) இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும். வழக்கமாக மண்டல, மகரவிளக்கு காலங்களில் தான் சபரிமலையில் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருக்கும். மாத பூஜைகளின்போது பக்தர்கள் குறைவாகவே வருவார்கள்.
ஆனால் தற்போது ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட அன்று முதலே பக்தர்கள் வருகை மிக அதிகமாக உள்ளது. இதனால் சன்னிதானத்தில் இருந்து மரக்கூட்டம் பகுதியையும் தாண்டி சரங்குத்தி வரை நீண்ட வரிசை காணப்பட்டது. கடந்த மூன்று தினங்களாக 55 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். இது தவிர முன்பதிவு செய்யாமலும் பக்தர்கள் வருகின்றனர். கடந்த இரு தினங்களாக 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
சபரிமலையில் போலீஸ் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது. 200க்கும் குறைவான போலீசாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் திரண்டு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 85 முதல் 90 பக்தர்களை 18ம் படி வழியாக ஏற்றினால் மட்டுமே நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போது 50 முதல் 55 பேரை மட்டுமே 18ம் படியில் ஏற்றுகின்றனர்.
இதுவும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆவதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐப்பசி மாதத்திலேயே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் மண்டல காலம் தொடங்க உள்ள அடுத்த மாதம் பக்தர்கள் மிக அதிக அளவில் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தரிசன நேரம் அதிகரிப்பு
பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக நேற்று தரிசன நேரம் 3 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. வழக்கமாக மாத பூஜை நாட்களில் பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 5 மணிக்குத் தான் திறக்கப்படும். ஆனால் நேற்று மதியம் 1 மணிக்குப் பதிலாக 3 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 5 மணிக்குப் பதிலாக 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருப்பது சற்று குறைந்தது.
The post 55 ஆயிரத்திற்கு அதிகமானோர் ஆன்லைனில் முன்பதிவு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: தரிசனத்திற்கு 6 மணிநேரத்திற்கும் மேல் காத்திருப்பு appeared first on Dinakaran.