×
Saravana Stores

நியோமேக்ஸ் நிறுவனம் ரூ.6000 கோடி மோசடி முதலீட்டாளர்களின் முழு விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து ரூ.6000 கோடி வரை மோசடி செய்தது. இததொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலர் கைதாயினர். இவ்வழக்கில் தொடர்புடைய சிலர் ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களும், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும் சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நியோமேக்ஸ் நிறுவனம் பெயரில் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் சொத்துகள் வாங்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் சொத்துகளை, அரசு முடக்கி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கலாம். நேற்றுக்குள் அந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கம் செய்து அரசாணையை வெளியிட வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் வரும் 30ம் தேதிக்குள் டெபாசிட் செய்த தொகைக்கான ஆதாரத்துடன், மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை நேரில் அணுகலாம். அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்படும் பட்டியலும், நிறுவனம் சார்பில் சமர்ப்பிக்கப்படும் முதலீட்டாளர்களின் பட்டியலும் ஒரே மாதிரியாக உள்ளதா? மாறுபட்டு காணப்படுகிறதா என ஆய்வு செய்ய தணிக்கை அதிகாரிகள், போலீஸ் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அக்குழு இந்த பட்டியலை ஆய்வு செய்யும்.

நியோமேக்ஸ் நிறுவனம் முதலீடு பெற்ற அட்டவணையும், பொதுமக்கள் நிறுவனத்தில் செலுத்திய முதலீடு பட்டியலையும் இணைத்து வரும் நவ.19க்குள் புதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரித்த பட்டியலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்களது இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

நியோமேக்ஸ் தரப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நவ.20க்குள் தெரிவிக்க வேண்டும். நியோமேக்ஸ் நிறுவனம் குறித்து தயாரித்த இறுதி அறிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், டிச.3ம் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் மீது அரசு நடவடிக்கை தொடரலாம் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

The post நியோமேக்ஸ் நிறுவனம் ரூ.6000 கோடி மோசடி முதலீட்டாளர்களின் முழு விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Neomax ,Madurai ,Neomax Financial Company ,Dinakaran ,
× RELATED ரூ.6,000 கோடி மோசடி வழக்கு நியோமேக்ஸ்...