- இலங்கை கடற்படை
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பக் நீரிணை
- இந்தியா
- இலங்கை
- வளைகுடா கடல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
* பல கோடி இழப்பால் மீன்பிடி தொழில் அடியோடு முடக்கம் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு, மீனவர்கள் கண்ணீர்
இந்தியா – இலங்கை இடையிலுள்ள பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல், தமிழக மீனவர்களின் முக்கிய மீன்பிடி பகுதியாக உள்ளது. தமிழகம், புதுச்சேரி மாநில கடலோர மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் இப்பகுதியில் மீன் பிடித்தலில் ஈடுபட்டு வருகின்றன. இதுபோல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், சிறிய வள்ளம், வத்தை, கட்டுமரங்களிலும் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க துவங்கினர்.
தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் தாக்குதல், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறத் துவங்கின. இதன் விளைவால் மீனவர்கள் உயிரிழப்பு, படகுகள் மூழ்கடிப்பு, உடல் உறுப்புகள் பாதிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. பல கோடி மதிப்பிலான பொருளாதார இழப்புகளையும் ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இக்காரணங்களால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிர் பலியானதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.
குறுகிய கடல் பரப்பை கொண்ட பாக் ஜலசந்தி கடலில் இந்தியா – இலங்கைக்கான எல்லைக்கோடுகள் உருவாகியதற்கு பிறகு மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மீனவர்கள், படகுகள் சிறைபிடிப்பு சம்பவங்கள் மட்டுமே நடந்தன. விசாரணைக்கு பின் விடுதலை செய்வது, படகுகளை விடுவிப்பது என்றிருந்த நிலை, பாஜ இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்றப் பின் தலைகீழாக மாறியது.
மீனவர்கள் மீது இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக அபாண்டமாக குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படுகின்றனர். கைதாகும் தமிழக மீனவர்களை ஒரே செயினில் கைவிலங்கு பூட்டி அழைத்துச் செல்வது, அபராத தொகை செலுத்த தாமதமானால் சிறையில் வைத்து மொட்டை அடிப்பது, ஒரே அறையில் 50க்கும் மேற்பட்ட மீனவர்களை அடைத்து சித்ரவதைக்கு ஆளாக்குவது, சிறையில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி மீனவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, சரியான உணவு வழங்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்வது என கண்மூடித்தனமான மனித உரிமை மீறல்கள் மீனவர்களுக்கு நிகழ்கிறது.
பறிமுதல் செய்யப்படும் படகுகள் அந்நாட்டின் புதிய சட்டத்தின்படி அரசுடமையாக்கப்படுகின்றன. பல லட்சம் மதிப்புள்ள 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தில் தவிக்கின்றனர். பாஜ அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் அதிகமான படகுகளும், ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களில் மட்டும் 59 படகுகளையும், 434 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம் மற்றும் இயற்கை சீற்றம், மீன்பாடு குறைவு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பிரச்னைகளால் மீன்பிடித் தொழில் நலிவடைந்து வருகிறது. இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பல படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்து கிடக்கின்றன. இலங்கை நீதிமன்ற உத்தரவின்பேரில், அரசுடமையாக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்பட்டு உடைக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீன்பிடிப்பில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மீனவர்கள், தங்களது படகுகளை உடைத்து விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மீன்பாடு குறைவு, பெரிய படகுகளுக்கு இணையாக மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை, தொடர்ந்து நஷ்டம் போன்ற காரணங்களால் மீனவர்கள் பலரின் படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படகுகள் பராமரிப்பு செய்ய முடியாமல் கடலில் மூழ்கியும், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உடைக்கப்பட்டுள்ளன.
படகுகளை விற்க முயலும்போது வியாபாரிகள் மிகவும் குறைந்த விலை கொடுத்து வாங்கி உடைத்து மரப்பலகை, இரும்பு, செம்பு கம்பிகள் தளவாடச் சாமான்களாக பிரித்து விற்று விடுகின்றனர். இதனாலும் படகின் உரிமையாளர்களாக விளங்கிய பலர் அன்றாட வருவாய்க்காக அடுத்தவரிடம் வேலைக்கு செல்லும் நிலை உருவாகிறது. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், ‘‘பாஜ அரசு இலங்கையிடம் உரிய பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்னையை தீர்க்கலாம்.
ஆனால், 10 ஆண்டுகளில் கண் துடைப்பாக மட்டுமே பேச்சுவார்த்தை ஓரிரு முறை நடந்துள்ளது. அதில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. மீனவர்கள், படகுகள் சிறைபிடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசையும் எச்சரிக்கவில்லை. கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலை கொள்ளாமல் பாஜ அரசு, வேதனைக்கடலில் மூழ்க வைத்து வேடிக்கை பார்க்கிறது’’ என கண்ணீர் மல்க தெரிவி்தனர்.
* வெளியுறவு அமைச்சர் உறவை பேணாதது ஏன்?
பாஜ ஆட்சியின்போது பிரதமர், நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடிக்கடி இலங்கை சென்று வருகின்றனர். குறிப்பாக, தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இம்மாத துவக்கத்தில் இலங்கை சென்று வந்தார். மேலும், இவர் பொறுப்பேற்ற பின் அடிக்கடி இலங்கை செல்வது வழக்கமாக உள்ள நிலையில், தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக இதுவரை எந்தவொரு முக்கிய பேச்சுவார்த்தையும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* ரூ.32 ஆயிரம் கோடி நிதி இலங்கைக்கு வாரி வழங்கிய இந்தியா கண்டிக்காதது ஏன்?
இலங்கை அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் அங்கு வீட்டு உபயோக பொருட்கள், எரிபொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கடும் விலை உயர்வை சந்தித்தன. தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு முதல் நாடாக இந்தியா உதவியது.
சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல், 27,000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக ரூ.32 ஆயிரம் கோடி கடனுதவியை இந்தியா வழங்கியிருக்கிறது. இதன்மூலமே இலங்கை சரிவிலிருந்து மீண்டது. தமிழக அரசு சார்பிலும் முதல்கட்டமாக 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன் மருந்து பொருட்கள் சென்னையிலிருந்து கப்பல் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* கழிப்பறையில் தங்க வைத்து உணவு தராமல் கொடூரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த செப்.28ம் தேதி கடலுக்கு சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த செல்வம் மற்றும் உயிர்த்தராஜ் ஆகியோரின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதிலிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்த மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, கடந்த 10ம் தேதி தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மீனவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மீண்டும் பிடிபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் 17 பேரும் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சிறையில் இருந்து வந்த மீனவர்கள் திடீரென பாம்பனில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிறையில் இருந்து விடுதலையாகி வந்த மீனவர் செபஸ்டியான் கூறுகையில், ‘‘எங்களை கைது செய்ததோடு, வவுனியா சிறையில் ஒரே அறையில் நூற்றுக்கணக்கான பேரோடு சேர்த்து அடைத்து வைத்தனர். முதல் 2 நாட்கள் கழிவறையில் தங்க வைத்து சித்ரவதை செய்தனர். மீனவர்களை விலங்குகள் போல் நடத்தினர். முறையான உணவின்றி எந்த உதவியும் கிடைக்காத வகையில் எங்களை அடைத்து வைத்தனர்’’ என்றார்.
* கடந்த 10 ஆண்டுகளில் கடும் தண்டனை விதிப்பு
10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் சில நாட்கள் தண்டனை பெற்று படகுடன் விடுதலை செய்யப்படுவர். ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பல லட்சம் மதிப்பிலான படகுகள் அந்நாட்டு அரசுடமையாக்கப்படுகிறது.
கைதாகும் மீனவர்களுக்கு ஆறு மாதம், ஓராண்டு, இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து நீண்ட காலம் சிறைக்கைதியாக வைக்கிறது. மேலும் பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மீனவர்களை பொருளாதாரரீதியாக முடக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
* ஒன்றிய பாஜ அரசின் திட்டத்தால் கடன் சுமை
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய பாஜ அரசு, கடந்த 2019ல் நீலப்புரட்சி திட்டம் என்ற பெயரில் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை அறிவித்தது. அதற்காக ரூ.200 கோடி நிதியை ஒதுக்கியது. இதில் 50 சதவீதம் மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட ஆழ்கடல் விசைப்படகை வாங்கிய மீனவர்களில் பெரும்பாலானோர் முறையான துறைமுக வசதி இல்லாததால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.50 லட்சம் வரை கடன் சுமைக்கு ஆளாகினர். இதனால் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகு வழங்குவதை எதிர்த்தனர். அந்த மீன்பிடிப்பையும் விட்டு விட்டனர்.
* ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
‘கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தும், வலைகளை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் அத்துமீறி வருகின்றனர். இதனை ஒன்றிய அரசு, தமிழக அரசு நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மதுரையை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், பிரதமரின் முதன்மை செயலாளர் உள்ளிட்டோர் பெயரை குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில், மனுவில் பிரதமரின் முதன்மை செயலாளர் எதிர் தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிரதமரின் முதன்மை செயலாளரை எதிர்தரப்பில் இருந்து நீக்க கோருவதற்கான காரணங்கள் குறித்த பதில் மனுவை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர்.
* கண்மூடித்தனமான தாக்குதல்
இலங்கை கடற்படை கற்களை வீசி மீனவர்களை தாக்குவது, ரோந்து கப்பலை கொண்டு மீன்பிடி படகை முட்டி கடலில் மூழ்கடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டி அடிப்பது, மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசுவது, படகுகளை முட்டி சேதப்படுத்துவது, படகில் உள்ள மீன்களை பறிமுதல் செய்வது என தொடர் அத்துமீறல் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறது.
The post 10 மாதங்களில் 59 படகுகள், 434 மீனவர்கள் சிறைபிடிப்பு: சித்ரவதை செய்யும் இலங்கை கடற்படை appeared first on Dinakaran.