கடலூர்: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே மாத்தூரை சேர்ந்தவர் பாக்கியராஜ்(40), பெயின்டரான இவருக்கும், நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணியன் மகன் கலைவாணன் என்ற ராம்கி (38) என்பவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கலைவாணன், பாக்யராஜை சரமாரியாக தாக்கியதில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கலைவாணனை கைது செய்தனர். இந்நிலையில், கொலைக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்ய வேண்டும் என கூறி பாக்யராஜ் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியனை மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வந்த சுப்பிரமணியனிடம் இந்த வழக்கில் அவரது மற்றொரு மகனான மணிமாறன் பெயரை சேர்க்காமல் இருப்பதற்காக மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ரூ.3.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதில் ரூ.1.65 லட்சத்தை சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். மீதி பணத்தைக் கேட்டு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தொந்தரவு செய்ததால் சுப்பிரமணியன், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இதை விசாரித்த விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
The post கொலை வழக்கில் பெயரை சேர்க்காமல் இருக்க ரூ.1.65 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: டிஐஜி அதிரடி appeared first on Dinakaran.