* 4 ஆண்டுகளில் 1.23 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்
சென்னை: மாநில போலீசார் ஒரு கிராம் போதை பொருளை கூட பிடிக்கவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த தரவும் இல்லாமல் கூறியிருந்தார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 1.23 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போலீஸ் புள்ளிவிவரத்துடன் தெரிவித்து ஆளுநரின் கூற்றை பொய்யாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதைப்பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு போலீசார் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதைப்பொருட்களை அனுப்பியது தொடர்பாக ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2486க்கும் அதிகமான குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுபோன்று போதைப்பொருளுக்கென தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றமும் பாராட்டு தெரிவித்திருந்தது. ஆனால், சமீப காலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல பொய்களை அடுக்கடுக்காக கூறி வருகிறார். அப்படி அவர் கூறும் பல விசயங்களுக்கு டேட்டா இல்லாமல் பேசுவதால் ஆளுநர் ரவிக்கு தமிழ்நாடு அரசு குட்டு வைத்து வருகிறது. சமீபத்தில் கூட, தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது.
ஒன்றிய அரசு போதை தடுப்பு பிரிவினர் மூலம் மட்டுமே பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுகிறது. போதை கிடங்குகள் பாகிஸ்தான், தமிழகம் மற்றும் துபாய் போன்ற பகுதிகளில் செயல்படுகிறது. ஒன்றிய அரசு போதை தடுப்புப் பிரிவினர், பல கிலோ கிராம் கெமிக்கல் போதைப் பொருட்களை பிடிக்கின்றனர். ஆனால் மாநில போலீசார் ஒரு கிராம் கூட பிடித்ததாக தெரியவில்லை என விமர்சித்திருந்தார்.
தற்போது ஆளுநர் ரவியின் பேச்சு தவறு என்பது போன்று தமிழ்நாடு காவல்துறை பதிலளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையால் கடந்த 4 ஆண்டுகளில் மெத்தாபெட்டமைன் – 65 கிலோ, மெத்தாகுவலோன்- 9 கிலோ, ஹெராயின் – 43.227 கிலோ, எஃபிட்ரைன் – 145 கிலோ, ஹாஷிஷ் – 97.7 கிலோ, LSD – 2.1 கிலோ, போதை மாத்திரைகள் – 1.23 லட்சம் மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை ரூ.18 கோடி சொத்துகள், 8,949 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
* 4 ஆண்டுகளில்… கடந்த 4 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்:
மெத்தாபெட்டமைன் – 65 கிலோ
மெத்தாகுவலோன்- 9 கிலோ
ஹெராயின் – 43.227 கிலோ
எஃபிட்ரைன் – 145 கிலோ
ஹாஷிஷ் – 97.7 கிலோ
LSD – 2.1 கிலோ
போதை மாத்திரைகள் – 1.23 லட்சம்
The post மாநில போலீசார் ஒரு கிராம் போதை பொருள் கூட பிடிக்கவில்லையா? ஆளுநர் ஆர்.என்.ரவியின் கூற்றை பொய்யாக்கிய தமிழ்நாடு போலீஸ் appeared first on Dinakaran.