பீஜிங்: சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த ராக்கெட் படையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் நேற்று திடீரென ஆய்வு செய்தார். சீன ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படையுடன் கடந்த 2015ல் ராக்கெட் படையும் உருவாக்கப்பட்டது. சீன அதிபர் ஜின்பிங்கின் ராணுவ சீர்த்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக இப்படை உருவாக்கப்பட்டது. இதில், அணு ஆயுதங்கள் உள்பட பல குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள், ராக்கெட்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் சீன ராணுவத்தின் மிக சக்திவாய்ந்த படையாக ராக்கெட் படை உள்ளது.
அதே சமயம் கடந்த ஆண்டில் ராக்கெட் படையின் உயர் அதிகாரிகள் மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஓராண்டில் 7 படைத் தலைவர்கள் ஊழல் புகாரில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் பலர் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்தவர்கள். ஊழல் அதிகாரிகளை நீக்கிய பிறகு, நாட்டின் அதிபரும், ராணுவத்தின் உச்ச அதிகாரம் படைத்தவருமான ஜின்பிங் ஹிபையில் நேற்று திடீரென ராக்கெட் படையை ஆய்வு செய்தார். அப்போது அவர், ராக்கெட் படை தங்கள் தடுப்பு மற்றும் போர் திறன்களை வலுப்படுத்தவும், சீன மக்களால் தரப்பட்ட பணிகளை உறுதியுடன் நிறைவேற்றவும் வலியுறுத்தினார்.
The post பல்வேறு ஊழலுக்கு பிறகு ராக்கெட் படையை சீன அதிபர் ஆய்வு appeared first on Dinakaran.