×
Saravana Stores

மஞ்சூர் சுற்று வட்டாரத்தில் தேயிலைத்தோட்டங்களுக்கு உரமிடுவதில் விவசாயிகள் தீவிரம்

 

மஞ்சூர், அக்.19: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலைத்தோட்டங்களுக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஹெக்டருக்கும் மேல் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை முன்னிட்டு, குந்தா பகுதியில் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட 8 கூட்டுறவு தொழிற்சாலைகளும் ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும் உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து 5 மாதங்களுக்கும் மேலாக போதிய மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது.

மேலும் தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் துவங்கி தற்போது வரை மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இடை, இடையே நல்ல வெயிலும் காணப்பட்டது. தேயிலை விவசாயத்திற்கேற்ற சீதோஷன நிலை நிலவுவதை தொடர்ந்து இதை பயன்படுத்திய பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தேயிலைத்தோட்டங்களில் உரமிடுதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

The post மஞ்சூர் சுற்று வட்டாரத்தில் தேயிலைத்தோட்டங்களுக்கு உரமிடுவதில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Manjur district ,Manjoor ,Gunda ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில்...