சண்டிகர்: சிறுநீரக நோயாளிகளுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். அரியானாவின் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜ 3ம் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி 2ம் முறையாக நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து நேற்று நயாப் சிங் சைனி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “மாநிலத்தில் பாஜவுக்கு பெரும் ஆணை தந்ததன் மூலம் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு மக்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என பாஜ தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக, நான் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட முதல் கோப்பு, சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை தொடர்பானது.
அதன்படி இனி நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு அரியானாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை செய்து கொள்ள மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும். இனி அந்த செலவை மாநில அரசே ஏற்று கொள்ளும். மேலும், அரசு வேலை வாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது” என்று இவ்வாறு தெரிவித்தார்.
The post அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை: முதல்வர் நயாப் சிங் சைனி அறிவிப்பு appeared first on Dinakaran.