- அருண்
- மாநில மனித உரிமைகள் ஆணையம்
- நீதிபதி சிக்கிமார்
- சென்னை
- மனித உரிமைகள் ஆணையம்
- நீதிபதி
- விக்கிமார்
- பெருநகர
- பொலிஸ் ஆணையாளர்
சென்னை: கமிஷனர் அருண் பெயரை நீக்க பதிவாளருக்கு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் கடந்த ஜூலை 8ம் தேதி பொறுப்பேற்றார். அப்போது அவர், அளித்த பேட்டியில் சென்னையில் முழுவதுமாக ரவுடிகள் ஒழிக்கப்படும் என்றும், அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லிக்கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டிற்கு சென்ற திருவொற்றியூர் உதவி கமிஷனர் இளங்கோவன், ரவுடியின் மனைவியிடம் கடுமையாக எச்சரித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன் வந்து உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் அக்டோபர் 14ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் முன்பு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சார்பில் கூடுதல் அட்வகெட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நேரில் ஆஜராகி கமிஷனர் அருண் சார்பில் ஒரு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கமிஷனராக பொறுப்பேற்ற அன்று, சட்டம் ஒழுங்கை பற்றி பத்திரிகையாளர்கள் கேட்ட போது, குற்றங்கள் தடுக்கப்பட்டு ரவுடிகளுக்கு அவர்களுக்கு புரிகிற மொழியில் சொல்லிக்கொடுக்கப்படும். சட்டப்படி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன். குற்றங்கள் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று ரவுடிகளுக்கு புரிய வைக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தேன். யாரையும் மிரட்டுவது போல் கூறவில்லை. ரவுடிகள் குறித்து, நான் அளித்த பேட்டியில் எந்த உள்நோக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் எனது பணியை செய்து வருகிறேன். எனவே எனக்கு அனுப்பட்ட சம்மனை திரும்ப பெறுமாறு உத்தரவிட வேண்டும்.
கடந்த 14ம் தேதி வள்ளுவர் கேட்டத்தில் ஒரு அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு பிரச்னை, மறுநாள் ஆயுதபூஜைக்கான பாதுகாப்பும் இருந்ததால் அன்று என்னால் ஆணையத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை. எனவே, இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆணையம் முன்பு, நான் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது, கமிஷனர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனரின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசினார்.
சில ரவுடிகள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி பேசுபவர்களாய் இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது. ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் நோக்கம் மற்றும் அதற்குமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது. ஒரு போலீஸ் கமிஷனர் என்பவர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து முறையான காவல் கண்காணிப்புப் பணி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி போலீஸ் கமிஷனர் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை அமைப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார். காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்துள்ளார். எனவே அவரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றார். இந்த வாதங்களை கேட்ட ஆணைய தலைவர் எஸ்.மணிக்குமார், போலீஸ் கமிஷனரின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கமிஷனர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் கமிஷனரின் பெயரை நீக்குவதற்கு ஆணையத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள அதிகாரிகள் வரும் 21ம் தேதி அவர்களின் விளக்கத்திற்கான மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post ரவுடிகளுக்கு எதிராக பேசிய விவகாரம் போலீஸ் கமிஷனர் அருண் பெயரை நீக்க உத்தரவு: மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவு appeared first on Dinakaran.