×

‘காசாவின் பின்லேடன்’ என்று அழைக்கப்படும் ஹமாஸ் தலைவனை குண்டுவீசி கொன்றதால் இஸ்ரேல் போர் முடிவுக்கு வருகிறது?


* 101 பணயக்கைதிகளை விடுவித்தால் இன்றே தீர்வு; அமெரிக்க அதிபர் சூசகம்
* யாஹ்யா சின்வாரை ‘ஐடிஎப்’ தீர்த்துக் கட்டியது குறித்து பரபரப்பு தகவல்கள்

டெல் அவிவ்: ‘காசாவின் பின்லேடன்’ என்று அழைக்கப்படும் ஹமாஸ் தலைவன் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படைகள் படுகொலை செய்த நிலையில், கடந்த 378 நாட்களாக நடந்த போரை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹமாஸ் பிடித்து வைத்துள்ள 101 பணயக்கைதிகளை விடுவித்தால் இன்றே தீர்வு என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து அண்டை நாடான பாலஸ்தீனத்தின் ஆட்சியை நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் இஸ்ரேலியர் மட்டுமின்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் ஆவார்கள். அன்றைய தினம் 200க்கும் மேற்பட்ட மக்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக சிறைபிடித்து அழைத்து சென்றனர். எனவே ஹமாசை பழிதீர்க்கும் வகையில், அவர்களுக்கு எதிராக கடந்த ஓராண்டுக்கு (இன்றுடன் 378 நாட்கள்) மேலாக இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. அந்த வகையில் ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இன்று வரை 42,438 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 99,246 பேர் காயமடைந்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். காசாவில் தொடங்கிய ேபார், தற்போது இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் லெபனான் நாட்டிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனானுக்கு எதிராக இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்தப் போர் ஈரான் வரை வேகமாக பரவியதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்தது. அதன்பின் இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அதேபோல் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகரையும் இஸ்ரேல் படுகொலை செய்தது. இஸ்மாயில் ஹனியே மரணத்திற்கு பின்னர் ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் (61) அறிவிக்கப்பட்டார். இவர்தான் கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் ஆவார். தற்போது அவரையும் இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டது. அவருடன் சேர்ந்து 3 தீவிரவாதிகளையும் இஸ்ரேல் கொன்றது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘உலக வரலாற்றில் யூதர்களை மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்த யாஹ்யா சின்வார், காசாவின் ரஃபாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டான். ஆனால் நமது போர் இன்னும் முடியவில்லை. இஸ்ரேல் படைகள் தீய சக்திகளை அழித்துவிட்டன. இருந்தாலும் எங்களின் பணி இன்னும் நிறைவடையவில்லை. ஹமாஸுக்கு எதிரான இந்தப் போரின் மிக முக்கியமான தருணம் யாஹ்யா சின்வாரின் மரணம் தான். காசாவில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள 23 நாடுகளை சேர்ந்த 101 பேரையும் விடுத்தால், காசாவில் நடக்கும் போரின் முடிவு நாளையே முடிவுக்கு வரலாம். அதற்கு ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சிறைபிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். பணயக்கைதிகளை யார் அனுப்பி வைத்தாலும், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். ஆனால் பணயக் கைதிகளுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், உங்களைக் கண்டுபிடித்து கொன்றுவிடுவோம்.

என்னைப் பொறுத்தவரையில், ஈரானால் உருவாக்கப்பட்ட தீவிரவாதக் கூட்டமைப்பு நம்முடைய கண் முன்னே சரிந்து கொண்டிருக்கிறது என்பதை காசா மக்களும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். அந்த தீவிரவாத கூட்டமைப்பின் தலைவர்களாக இருந்த நஸ்ரல்லா கொல்லப்பட்டான்; மொஹ்சினும் கொல்லப்பட்டான்; ஹனியாவும் கொல்லப்பட்டான்; முகமது டெஃபும் போய் சேர்ந்துவிட்டான். தற்போது யாஹ்யா சின்வாரும் அழிக்கப்பட்டான்’ என்று ஆவேசமாக கூறினார். யாஹ்யா சின்வாரைக் கொன்றதன் மூலம் ஹமாசுக்கு எதிரான போரில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றதாக இஸ்ரேல் உணர்கிறது. ஆனால் யாஹ்யா சின்வாரின் மரணம் குறித்த இஸ்ரேலின் அறிக்கையை நம்ப வேண்டாம் என்று ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது; ஆனால் யாஹ்யா சின்வாரைக் கொன்றதன் மூலம், இந்த சம்பவம் ஹமாசுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை அழித்ததன் மூலம், காசா போர் முடிவுக்கு வருமா என்பது கேள்வியாக உள்ளது.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் மக்கள் கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் ராணுவத்துடன் தோளோடு தோள் நின்று செயல்படுமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமின்றி இன்றைய நாளானது உலகிற்கே மிகவும் நன்மை பயக்கும் நாள். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பிற நாடுகளின் மக்களின் மரணத்திற்கு யாஹ்யா சின்வார் தான் காரணம். ஹமாசை அழிப்பதற்கு இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு. இன்றைய தினம் இஸ்ரேல் வெற்றி தினமாகும். விரைவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசுவேன்’ என்றார். அமெரிக்க அதிபரின் இந்த கருத்தால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உலக தலைவர்கள் வரவேற்பு
* பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட பதிவில், ‘இஸ்ரேல் மீதான தாக்குதலின் மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை வரவேற்கிறேன். ஓராண்டுக்கு முன் நடந்த தாக்குதலில் பலியான பிரான்ஸ் மக்கள் 48 பேர் உட்பட அனைவரையும் நினைவு கூர்கிறேன். இஸ்ரேலுடன் பிரான்ஸ் உறுதியாக நிற்கிறது. எனவே பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அனைவரையும் உடனடியாகவும், எவ்வித நிபந்தனையின்றியும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’ என்றார்.
* அமெரிக்காவின் விஸ்கான்சின் கல்லூரி வளாகத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ​​அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும், பாலஸ்தீன மக்கள் கண்ணியமாக வாழும் வகையிலும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் சமாதானத்தை நோக்கி நகர வேண்டும். இன்றைய சம்பவம் மூலம் நீண்டகாலமாக நிலவிவந்த மோதலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

எதிரிகளுக்கு சரியான செய்தி
‘காசாவின் பின்லேடன்’ என்று அழைக்கப்படும் யாஹ்யா சின்வாரை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட பதிவில், ‘டிஎன்ஏ சோதனை உறுதி செய்யப்பட்டது. இதனால் யாஹ்யா சின்வாரின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை’ என்று கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு தீவிரவாதியையும் அடையாளங் கண்டு அழிப்போம். தப்பியோட முயன்ற போது யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். அவர் ஒரு தளபதியாக கொல்லப்படவில்லை. யாஹ்யா சின்வாரை கொன்றதன் மூலம் நம்முடைய எதிரிகளுக்கு சரியான செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எனவே இஸ்ரேல் மக்கள் அல்லது நமது பாதுகாப்புப் படைகளுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரையும் ஐடிஎப் அழிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில், முன்னாள் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரின் புகைப்படங்களை இணைத்துள்ளார். அத்துடன் அவரது பதிவில் வெளியிடப்பட்ட மூன்றாவது புகைப்படம் கருப்பு நிறத்தில் உள்ளது.

இஸ்ரேலுக்கு ஈரான் கண்டனம்
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணம் குறித்து ஐ.நாவுக்கான ஈரான் சமூக வலைதளப் பக்கத்தில், ‘ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மரணமானது, இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும். யாஹ்யா சின்வார் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். இஸ்ரேல் அவரைக் கொன்றபோது யாஹ்யா சின்வார் தலைமறைவாகவில்லை. இதன்மூலம் தனது எதிர்ப்பை இஸ்ரேலுக்கு காட்டியுள்ளார். பாலஸ்தீன விடுதலைக்காக போராடும் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் யஹ்யா சின்வாரின் வாழ்க்கை ஓர் உதாரணமாக விளங்கும். தியாகம் தான் நம்முடைய உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜோ பைடன் பேச்சை கேட்டிருந்தால் அவ்வளவுதான்….
யாஹ்யா சின்வாரின் மரணம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், முன்னாள் சிஐஏ இயக்குநருமான மைக் பாம்பியோ கூறுகையில், ‘அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் போர் நிறுத்த கோரிக்கைக்கு, இஸ்ரேல் அரசு செவிசாய்க்காததற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இஸ்ரேல் பிரதமர் இவர்களது பேச்சை கேட்டிருந்தால், யாஹ்யா சின்வார் இன்று உயிருடன் இருந்திருப்பார். முன்பை விட அதிகமான இஸ்ரேலியர்களையும், அமெரிக்க மக்களையும் கொல்ல அவர் சதித்திட்டம் தீட்டியிருப்பார். ஈரான் ஆதரவு தீவிரவாதிகளை அழிக்க இஸ்ரேல் சரியான பாதையில் தொடர வேண்டும். இதன் மூலமே மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுக்க முடியும்’ என்றார்.

யாஹ்யா சின்வார் யார்?
இஸ்ரேல் மீதான தாக்குதலின் மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வார், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஹமாஸ் அமைப்பினர் தலைவரானார். இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பிறகு, ஹமாசை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 1962ல் பிறந்த யாஹ்யா சின்வார், கடந்த 1987ல் ஹமாஸ் அமைப்பு தொடங்கிய தலைவர்களில் ஒருவராவார். கடந்த 1980 ஆண்டுகளின் பிற்பகுதியில் இஸ்ரேல் படைகளால் யாஹ்யா சின்வார் கைது செய்யப்பட்டார். இவர் மீது சந்தேகத்திற்குரிய 12 பேரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு ‘தீவிரவாதத்தின் ஹிட்லர்’ என்ற புனைப்பெயரும் வைக்கப்பட்டது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் யாஹ்யா சின்வாருக்கு நான்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் அடிப்படையில் யாஹ்யா சின்வார் விடுவிக்கப்பட்டார். அதன்பின் ஹமாசின் ஆயுதப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃபுடன் இணைந்து கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலை நடத்த யாஹ்யா சின்வார் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 1,200 இஸ்ரேலியர் உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிருடன் புதைக்கும் குரூர தலைவன்
இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவன் யாஹ்யா சின்வார் மிகவும் ஆபத்தான நபராவார். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக 12 பாலஸ்தீனர்களை கொன்றார். அவர்களில் ஒருவரை உயிருடன் புதைத்துள்ளார். அதன்பின் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் யாஹ்யா சின்வார் பிறந்தவர் என்பதால், அவரை ‘கான் யூனிஸின் கசாப்பு கடைக்காரர்’ என்று பலரும் அழைத்தனர். யாஹ்யா சின்வாருக்கு நெருக்கமானவர்கள் கூட அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அந்தளவுக்கு கோபப் பார்வையுடன் இருப்பார். யாரேனும் அவரது அறிவுரையைத் தவிர்த்தாலோ அல்லது அவர் கூறிய வேலையைச் செய்யாவிட்டாலோ அந்த நபரை உயிருடன் புதைத்து விடுபவர். ஓரின சேர்க்கையை கடுமையாக எதிர்க்கும் யாஹ்யா சின்வார், கடந்த 2015ல் ஹமாஸ் தளபதி மஹ்மூத் இஷ்திவியை சித்திரவதை செய்து கொன்றார்; மஹ்மூத் இஷ்திவி மீது ஓரினச்சேர்க்கை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. காசாவில் கட்டமைக்கப்பட்டுள்ள ஹமாசின் சுரங்கப் பாதைகளில்தான் அவரது பெரும்பாலான வாழ்க்கை ஓடியது. அங்கிருந்து தான் ஹமாஸ் போராளிகளுக்கு கட்டளைகளை பிறப்பித்து வந்தார்.

2015ல் அமெரிக்கா அறிவித்தது
கடந்த 1988ம் ஆண்டு இஸ்ரேல் போலீசார் யாஹ்யா சின்வாரைக் கைது செய்தது. அப்போது யாஹ்யா சின்வாருக்கு வயது 19. இவ்வழக்கில் அவருக்கு நான்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டு, இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் ஏற்பட்ட கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை ‘உலகளாவிய தீவிரவாதி’ என அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது சொத்துக்களை பிரான்ஸ் முடக்கியது. மேலும் அவரை தேசிய தடைகள் பட்டியலில் சேர்த்தது. இத்தனை கட்டுப்பாடுகள், எதிர்ப்புகள் இருந்தும் அவரது செல்வாக்கு குறையவில்லை. ஆனால் இன்று இஸ்ரேல் படைகளால் வீழ்த்தப்பட்டுள்ளார்.

யாஹ்யா சின்வாரை ஐடிஎப் எப்படி கொன்றது?
காசாவின் ரஃபாவில் சுரங்கப்பாதையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் உள்ளிட்டோர் பதுங்கியிருப்பது இஸ்ரேலின் உளவு அமைப்பான ஐடிஎப்-க்கு தெரிந்தது. அதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த இஸ்ரேல் படைகள், ஹமாஸ் அமைப்பினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் இருந்த யஹ்யா சின்வாரும் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். ஐடிஎப் வீரர்கள் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது தான், யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். இதனை உறுதி செய்யும் வகையில், இஸ்ரேல் ராணுவத்தின் மருத்துவ நிபுணர் குழு களத்தில் இறங்கியது. அவர்கள், யஹ்யா சின்வாரின் பற்கள் மற்றும் கைரேகைகளின் மாதிரிகளை எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தினர். தொடர் பரிசோதனை ஆய்வுக்கு பின், அந்த சடலம் யாஹ்யா சின்வாரின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஐடிஎஃப் வீரர்கள் அந்த உடலை கைப்பற்றினர். இஸ்ரேலிய பணயக்கைதிகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய யஹ்யா சின்வார், தற்போது கொல்லப்பட்டதால் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அகதிகள் முகாமில் பிறந்த சின்வார்
இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட யாஹ்யா சின்வார் தனது வாழ்நாளின் 23 ஆண்டுகளை இஸ்ரேல் நாட்டின் சிறைகளில் கழித்தார். அதனால் இஸ்ரேலின் மொழி, கலாசாரம், சமூகம் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். பாலஸ்தீன பிரச்னையை வன்முறையின் மூலமே தீர்க்க முடியும் என்று நம்பினார். காசாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்த அவர், கடந்த 1948ல் இஸ்ரேல் நாடு உருவானபோது, ​​ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் மூதாதையர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யாஹ்யா சிவாரின் குடும்பத்தினரும் அடங்குவர். அதனால் சின்வாரின் பெற்றோர் காசாவில் அகதிகளாக ஆனார்கள். அதனால் சிறு வயதில் இருந்தே இஸ்ரேலை பழிதீர்க்க ஹமாஸ் என்ற அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார் என்கின்றனர்.

தன்னை விட வயது குறைந்த பெண்ணுடன் திருமணம்
யாஹ்யா சின்வார் தனது ஆரம்பக் கல்வியை காசாவின் கான் யூனிஸில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அதன் பிறகு காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில், தன்னை விட வயது குறைந்த பெண்ணுடன் நட்பு கொண்டார். இந்த நேரத்தில் அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்ததும், அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.இருப்பினும் அவரது 3 குழந்தைகள் பற்றிய எந்த தகவலும் இல்லை. இருந்தாலும் சின்வாரின் மனைவி தற்போது அவர் படித்த கல்லூரியில் ஆசிரியையாக உள்ளார். இஸ்ரேல் போர் தொடங்கிய பின்னர், அந்த கல்லூரியின் இணையதளத்தில் இருந்து சின்வாரின் மனைவியின் அனைத்து விவரங்களும், புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. சின்வாரின் மனைவியின் முகம் பொதுவெளியில் யாருக்கும் தெரியாது. காரணம் அவர் எப்போதும் புர்கா அணிந்தவாறே இருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ‘காசாவின் பின்லேடன்’ என்று அழைக்கப்படும் ஹமாஸ் தலைவனை குண்டுவீசி கொன்றதால் இஸ்ரேல் போர் முடிவுக்கு வருகிறது? appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Finlayton of ,Gaza ,US ,President ,Susakam ,IDF ,Yahya Sinwar ,Tel Aviv ,Finland ,Finlayton ,of ,Dinakaran ,
× RELATED போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில்...