×
Saravana Stores

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் தமிழக முதல்வர், இதனை கனிவுடன் பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil ,Nadu ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Mu. K. Stalin ,
× RELATED முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வனின்...