×
Saravana Stores

கைகளில் கட்டும் கருப்பு கயிறுக்கு எத்தனை மாதம் வரை சக்தி இருக்கும்?

கைகளில் கட்டும் கருப்பு கயிறுக்கு எத்தனை மாதம் வரை சக்தி இருக்கும்? சிலர் கலர் கலராக கைகளில் கயிறு கட்டிக் கொள்கிறார்களே, இது சரியானதா?
– கே.விஸ்வநாத், பெங்களூரு.

வெறுமனே கருப்பு கயிறு கட்டுவது என்பது வேறு, மந்திரித்து கட்டிக் கொள்வது என்பது வேறு. வெறுமனே கருப்பு கயிறு கட்டிக் கொள்வது என்பது அவர்களது நம்பிக்கைக்கு உட்பட்டது. அதேநேரத்தில் தேவைக்கு ஏற்றவாறு கயிற்றினை வைத்து மந்திர ஜபம் செய்து கட்டுவது என்பதும் உண்டு. முழுமையாக மந்திர ஜபத்தினால் கட்டப்பட்ட கயிற்றிற்கு அது தானாக நைந்து போய் அறுந்துபோகும் வரை சக்தி என்பது நீடித்திருக்கும். அவ்வாறு மந்திரிக்கப்பட்ட கயிறுகளை கைகளில் கட்டி முடிச்சிடும்போது முடிச்சிற்கு அருகில் சிறிதளவு மிஞ்சியிருக்கும் பாகத்தினை கத்திரிக்கோலால் வெட்டிவிடக் கூடாது. அதனை அப்படியே கயிற்றிற்குள் சுருட்டி விட வேண்டும். கத்திரிக்கோல் வைத்து வெட்டும்போது அந்தக் கயிறு தனது மந்திர சக்தியை இழந்துவிடும். மந்திர சக்தியை இழந்துவிட்ட கயிற்றினை கட்டுவதில் எந்தவிதமான பலனும் உண்டாகாது. மந்திரித்து ஜபம் செய்யப்பட்ட கயிற்றினை கைகளில் கட்டியிருப்பவர்கள் பிறப்புத் தீட்டு, இறப்புத் தீட்டு போன்றவற்றில் கலந்துகொள்ள நேரும்போது, வீட்டிற்கு வந்து ஸ்நானம் செய்தபின்பு சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தையோ அல்லது காயத்ரி மந்திரத்தையோ 108 முறை ஜபம் செய்ய கயிற்றின் மீதான மந்திரசக்தி மீண்டும் உயிர் பெறும். இந்தக் கயிறு, கருப்பு நிறத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதன் நிறமானது அவரவர் தேவைக்கேற்றவாறு மாறுபடும். உதாரணத்திற்கு கண்திருஷ்டி, நோய் முதலான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு கருப்பு நிறமும், எதிரிகளால் உண்டாகும் பிரச்னைகளை சந்திக்க சிவப்பு நிற கயிறும், வியாபார வெற்றி, தொழிலில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு பச்சை நிறமும், உத்யோக உயர்வு, மங்களகரமான சுபநிகழ்வுகளை வேண்டும்போது மஞ்சள்நிற கயிறும் பயன்படும். ஆக, கைகளில் மந்திரித்து கட்டப்படும் கயிறுகளின் நிறம் அதன் தேவைக்கேற்றவாறு மாறுபடும். வெவ்வேறு வண்ணங்களில் கைகளில் கயிறு கட்டிக் கொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. விதவிதமாக கயிறு கட்டிக் கொள்வதால் மட்டும் எந்த ஒரு பணியிலும் வெற்றி கண்டுவிட முடியாது. எண்ணமும், செயலும், இறைநம்பிக்கையும் ஒன்றிணையும்போதுதான் செயலில் வெற்றி என்பது சாத்தியமாகிறது.

?தெய்வ நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?
– யாழினி பர்வதம், சென்னை-78.

வித்தியாசம் என்று சொல்வதை விட இரண்டும் ஒன்றுதான் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். தன்னம்பிக்கை உள்ளவனிடம்தான் தெய்வ நம்பிக்கை என்பதும் இருக்கும், தெய்வநம்பிக்கை உள்ளவனிடம்தான் தன்னம்பிக்கையும் வலுப்பெற்றிருக்கும். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்ற அத்வைத சித்தாந்தத்தின்படி தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்தவனுக்கு என்றுமே கவலையில்லை. தன்னுள்ளே இருக்கும் இறைசக்தியை நம்பும்போது தன்னம்பிக்கை என்பது கூடுகிறது. தன் மீது நம்பிக்கை கூடும்போது இறைத்தன்மையின் சக்தியும் அதிகரிக்கிறது. தன்னை மட்டும் நம்பிக்கொண்டு இறைசக்தியை நம்பாதவர்களை நாத்திகவாதிகள் என்றுதானே சொல்கிறோம் என்ற சந்தேகம் இங்கு எழலாம். முழுமையாக தங்களை நாத்திகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருப்பதில்லை. ஒரு துன்பம் என்பது வரும்போது செய்வதறியாது தடுமாறிப் போகிறார்கள். அதே நிலைமை தெய்வநம்பிக்கை அதிகம் கொண்ட ஒரு ஆத்திகவாதிக்கு வரும்போது எல்லாம் இறைவன் செயல், அவன் பார்த்துக்கொள்வான் என்று எந்தவிதமான சஞ்சலத்திற்கும் ஆளாகாமல் இறைவனின்பால் தங்கள் சுமையை இறக்கி வைத்துவிட்டு தங்கள் கடமையைச் செய்து வெற்றியினைக் காண்பார்கள். அவர்கள் கொண்டிருக்கும் இறைநம்பிக்கையின் காரணமாக அங்கே அவர்களது தன்னம்பிக்கை என்பது உயருகிறது. வெற்றித் திருமகளும் அவர்களைத் தேடி வருகிறாள். ஆக தன்னம்பிக்கை வேறு, தெய்வ நம்பிக்கை வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

?உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நேரத்தில் எதனைக் காணவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது?
– தமிழ்செல்வன், ஊரப்பாக்கம்.

தாமரை புஷ்பம், பொன், தீபம், கண்ணாடி, சூரியன், தணல், சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், கோபுரம், மேகம் சூழ்ந்த மலை, கன்றையுடைய பசு, தனது வலதுகை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு ஆகியவை தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தக்கவை என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதி இரவில் தூங்கி அதிகாலையில் எழுபவர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர, மற்ற நேரங்களில் உறங்கி எழும்போது பொருந்தாது.

?எங்கள் வீட்டுச் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் பல்லி அவ்வப்போது சத்தமிடுகிறது. இது நல்லதா?
– ராமகிருஷ்ணன், விழுப்புரம்.

பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கத்தில் விளக்கமாக சொல்லியிருப்பார்கள். பல்லி சத்தமிடும் சமயத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அல்லது எந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதனைப் பொறுத்து அதற்கான பலன் மாறுபடும். நாளும் கிழமையும், பல்லி உட்கார்ந்து சத்தமிடும் திசையும் இதற்கான பலனில் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமையில் வடக்கு திசை நோக்கி பல்லி சத்தமிட்டால் ‘தன லாபம்’ என்ற பலன் உண்டாகும். திங்கட்கிழமையில் ஈசான்ய பாகத்தை நோக்கி அதாவது வடகிழக்கு திசையை நோக்கி சத்தமிட்டால் திருமணம் தொடர்பான பேச்சு வெற்றி பெறும் என்பது பலன். அதே நேரத்தில் அதே வடகிழக்கு திசை நோக்கி சனிக்கிழமையில் சத்தமிட்டால் கள்வர் பயம், பொருட்கள் திருட்டு போகும் என்று பலன் உரைப்பர். இதுபற்றிய விரிவான பலன் எல்லா பஞ்சாங்கங்களிலும் தெளிவாக சொல்லியிருப்பார்கள். இதுபோன்ற பலன்கள் தத்தம் அனுபவத்தின் மூலமாக நம் முன்னோர்களால் தொகுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி உயிரியல் விஞ்ஞானிகள் இந்த பலன்களை உண்மையென்று ஏற்றுக்கொள்வதில்லை.

?வயதானவர்கள் அமைதியாக வாழ என்ன வழி?
– சுவாமிநாதன், அருப்புக்கோட்டை.

பொதுவாக வயது என்பது ஒருவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தளர வைத்து விடும். வயது ஆக ஆக வாழ்வில் விரக்தி ஏற்படவே செய்யும் அவர்கள் சந்திக்கும் பல பிரச்னைகள், இழப்புக்கள், அவர்களை நிலை குறையச் செய்யும். இதற்கு ஒரே மாற்று ஆன்மிகம்தான். கூட்டு வழிபாடு, சத்சங்கம், பிடித்த கோயிலுக்கு சென்று வழிபடுவது போன்ற செயல்களே இதற்கு மருந்து.

?அன்னதானம் செய்பவர்கள் தானே முன்னின்று செய்ய வேண்டுமா அல்லது பணம் கொடுத்து விட்டால் போதுமா?
– வண்ணை கணேசன், சென்னை.

உங்களுடைய வயிற்றுப் பசிக்கு ஹோட்டலுக்குச் சென்று பணம் கட்டிவிட்டால் போதுமா அல்லது உணவினை வாங்கி கையால் எடுத்துச் சாப்பிட வேண்டுமா? பணத்தை செலுத்துவதால் மட்டும் வயிறு நிறைந்துவிடுமா? உணவினை நம் கையால் எடுத்துச் சாப்பிட்டால்தான் வயிறு நிறைகிறது. அதுபோல அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் தங்கள் கைகளால் தாங்களே முன்னின்று செய்தால்தான் அதற்குரிய முழுமையான பலனை அடைய முடியும். பணத்தைக் கட்டி அன்னதானத்தைச் செய்விப்பதால் புண்ணியம் என்பது வந்து சேரலாம். ஆனால் அதனைச் செய்பவர்கள் தாங்களே முன்னின்று செய்யும் போது தங்களுடைய மனதில் எல்லையற்ற ஆனந்தத்தை அடைய இயலும் என்பதே அனுபவ பூர்வமான உண்மை.

The post கைகளில் கட்டும் கருப்பு கயிறுக்கு எத்தனை மாதம் வரை சக்தி இருக்கும்? appeared first on Dinakaran.

Tags : K. Viswanath ,Bangalore ,
× RELATED பெருந்தன்மை பற்றி சூர்யா சொன்ன விஷயம்: கார்த்தி பகிர்வு