- ஈஷா யோக மையம்
- கோயம்புத்தூர்
- உச்ச நீதிமன்றம்
- தில்லி
- ஈஷா மையம்
- காமராஜ்
- வடவள்ளி,
- சென்னை உயர் நீதிமன்றம்
- லதா
- கீதா
- தின மலர்
டெல்லி : கோவை ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், “எனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஷா யோகா மையத்தில், யோகா கற்கச் சென்றனர்.அதன் பின்னர், அவர்கள் அங்கயே தங்கி விட்டனர். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் நானும், எனது மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், எனது மகள்களுடன் பேச முடியும் என அவர்களது தரப்பில் கூறப்படுகிறது. எனது மகள்களை மீட்டுத் தர வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் பின்வருமாறு..
ஈஷா தரப்பு: “அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தந்தை மீதும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்”
தமிழ்நாடு அரசுத்தரப்பு: ” ஈஷா மையத்துக்கு சென்ற பலரை காணவில்லை; அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஷா மையத்தில் பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் விசாகா கமிட்டி செயல்படவில்லை. ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது”
நீதிபதிகள்: “நிலுவை வழக்குகளை சட்டப் படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது.ஈஷா மையத்தை அவதூறு செய்யும் நோக்கம் இல்லை. பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாக கமிட்டியை அமைக்க வேண்டும்.
தலைமை நீதிபதி: “2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு வழக்கு விசாரணையை முடித்து வைக்கப்பட்டது.
The post கோவை ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.