திருவாடானை, அக். 18: திருவாடானை அருகே வெள்ளையபுரம் – மண்டலக்கோட்டை பகுதியில் சிங்காரம் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மற்றும் கன்றுகுட்டி மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டுள்ளது. அப்போது வெள்ளையபுரம் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் பாழடைந்த செப்டிக் டேங்கில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக அதில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழைநீர் தேங்கி மூடப்படாமல் உள்ள பாழடைந்த செப்டிக் டேங்கில் அவ்வழியாக சென்ற பசுமாடும், அதன் கன்றுகுட்டியும் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் திருவாடானை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) உத்தண்டசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து சிக்கிய பசுமாட்டையும், கன்றுகுட்டியையும் உயிருடன் பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
The post பாழடைந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்த பசு, கன்றுகுட்டி மீட்பு appeared first on Dinakaran.