சென்னை: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மாருதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. இந்நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை தமிழ்நாட்டில் அமைத்து அதிக கார்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இந்நிறுவனத்தின் ஆலை நிறுவப்பட்டு, கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
அதன்படி, பெட்ரோல், டீசல் கார் என ஆண்டுக்கு 7.40 லட்சம் உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தி திறனை ஆண்டுக்கு 8.50 லட்சமாக உயர்த்தவும், எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டது. எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்க ஆண்டுக்கு 1 லட்சத்து 78 ஆயிரம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய முடியு செய்தது. இந்நிலையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் தற்போது தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகி உள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் உள்ள திறன் வாய்ந்த மனித வளம், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. அதன்படி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளில் 100 மின்னேற்ற நிலையங்களையும் ஹூண்டாய் நிறுவனம் அமைக்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதற்கு முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இந்தநிலையில் சென்னை இருங்காட்டுகோட்டையில் உள்ள கார் தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனமானது 2023ல் தமிழ்நாடு அரசுடன் ஒருசில புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தது.
அதில் ரூ.26 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் கூடுதலாக முதலீடு செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக ரூ.1,500 கோடி முதலீடு செய்வதற்கான நடவடிக்கையை ஹூண்டாய் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஹூண்டாய் நிறுவனம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2023ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.20,000 கோடி மதிப்பில் நீண்ட கால முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த ஜனவரியின் முதலீட்டாளர் மாநாட்டின்போது ரூ.6000 கோடி கூடுதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த முதலீட்டு நிதியிலிருந்து 2023 முதல் 2028ம் ஆண்டு வரை தொழிற்சாலையை நவீனப்படுத்தவும், விரிவுபடுத்தவும் ரூ.5000 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இருங்காட்டுக்கோட்டையில் தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் தொழிற்சாலையை நவீனமயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்த உடன் நவீனமயமாக்கும் பணியானது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ரூ.1500 கோடியில் நவீனமாகும் ஹூண்டாய் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம் appeared first on Dinakaran.