- சென்னை
- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பள்ளிக் கல்வித்துறை செயலாளர்
- மதுமதி
- பள்ளி கல்வி இயக்குனர்
- கண்ணப்பன்
சென்னை: பருவமழை காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் நரேஷ், சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் மூலமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டிடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த பாதுகாப்பு அறிவுரைகள் வழங்க வேண்டும். அனைத்து வகைகளிலும் பள்ளிகளின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
முன்னதாக, சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேனிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
The post பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.