×
Saravana Stores

மழை நீர் வடிகால்வாய் பணிகளை அரசியலாக்க முயற்சி எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: மாநகராட்சி ஊழியர்களின் பணி மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு இருந்திருக்கிறது. எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் பகுதியில், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிருபர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:

* வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்கிறார்கள். அதுபற்றி…
பதில்: இதை அரசியலாக மாற்றத்தான் முயற்சி செய்கிறார்கள். எவ்வளவு நன்மையெல்லாம் நடந்திருக்கிறது, என்ன பணிகள் நடந்திருக்கிறது என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும்.

* வடகிழக்கு பருவமழைக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. அது பற்றி…
பதில்: எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து நாங்கள் அதற்கான பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம்.

* மழைக்கான பணிகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வருகிறது. அதைப்பற்றி உங்கள் கருத்து?
பதில்: அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இருந்தால் தானே கவலைப்பட வேண்டும். அதுபோன்று சூழ்நிலை கிடையாது. இப்போது மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். இன்றைக்கு பத்திரிகைகளை படித்துப்பாருங்கள். மக்களிடம் பேட்டியெடுத்து பதிவிட்டிருக்கிறார்கள். அதை படித்துப் பாருங்கள்.

* சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீர் அனைத்து இடங்களிலும் வடிந்துவிட்டதா?
பதில்: எங்களுக்கு தெரிந்த வரை எல்லா இடங்களிலும் மழைநீர் வடிந்துவிட்டது. எங்களுக்கு தெரியாமல் சில இடங்களில் இருந்தாலும், அதிலும் உரிய கவனம் செலுத்தி, அதையும் எடுப்பதற்கான முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறோம்.

* மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் எல்லாம் எப்படி இருந்தது?
பதில்: மிகவும் சிறப்பாக, மிகவும் பெருமைப்படக்கூடிய அளவிற்கு, மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு இருந்திருக்கிறது. அதற்காக மாநகராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் அதேபோன்று மற்ற துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் நன்றி கூறியுள்ளேன். வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளேன்.

* சமூக ஊடகங்களில் நிறைய பாராட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறதே? அது பற்றி…
பதில்: பாராட்டுகளும் வருகிறது. அதே நேரத்தில், அதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. அந்த பணிகளைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

* அரசின் முழுத் திறனையும் பயன்படுத்தும் அளவிற்கு மழை அளவு இருந்ததா?
பதில்: நிச்சயமாக இருந்தது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எந்த பிரச்னையும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post மழை நீர் வடிகால்வாய் பணிகளை அரசியலாக்க முயற்சி எந்த மழை வந்தாலும் எதிர்கொள்ள தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,M.K.Stalin ,Kolathur ,
× RELATED விளையாட்டுத் துறையில் உலகத்தையே...