ஜெருசலேம்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். மேலும், காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இஸ்ரேலில் 1,200 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். மேலும் 250க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பிணைக்கைதியாக பிடித்துச் சென்றது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாக காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவ வீர்கள் நேற்று முன்தினம் கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில், 3 ஹமாஸ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாராக இருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் சந்தேகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் யஹ்யா. இதனால் இவரது மரணம் ஹமாசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும், இஸ்ரேலுக்கு போர் பெரிய வெற்றியாகவும் கருதப்படுகிறது. இதனால், இறந்த நபரின் உடலை டிஎன்ஏ சோதனைக்கு இஸ்ரேல் ராணுவம் உட்படுத்தி உள்ளது. டிஎன்ஏ அறிக்கை மூலம் அது யஹ்யாவா என்பது உறுதி செய்யப்படும் என இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதற்கிடையே, வடக்கு காசாவில் ஜபாலியாவில் நிவாரண முகாமாக செயல்பட்டு வந்த ஐநா பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுவீச்சில் 5 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியாகினர்.
The post அக்.7 தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யஹ்யா பலி? உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்துகிறது இஸ்ரேல் ராணுவம் appeared first on Dinakaran.