×
Saravana Stores

தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு

சண்டிகர்: தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக நயாப்சிங் சைனி பதவி ஏற்றார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா, பா.ஜ கூட்டணி முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்.5ம் தேதி நடந்த தேர்தலில் பாஜ 48 இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. ஹிசார் எம்எல்ஏ சாவித்ரி ஜிண்டால் உட்பட 3 சுயேச்சைகளும் பா.ஜவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அக்.16ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியபிரதேச முதல்வர் மோகன்யாதவ் தலைமையில் நடந்த பா.ஜ எம்எல்ஏக்கள் குழு கூட்டத்தில் அரியானா முதல்வராக நயாப்சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நேற்று அரியானா முதல்வராக தொடர்ந்து 2ம் முறையாக நயாப்சிங் சைனி பதவி ஏற்றார். கடந்த மார்ச் மாதம் அரியானா முதல்வராக இருந்த மனோகர்லால் கட்டார் பதவி விலகியதை தொடர்ந்து முதல்வராக சைனி பதவி ஏற்றார். இப்போது தேர்தலில் வெற்றி பெற்றபிறகு தொடர்ந்து 2வது முறையாக பதவி ஏற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பு பஞ்ச்குலாவில் நடந்த விழாவில் நயாப் சிங் சைனிக்கு அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதை தொடர்ந்து அம்பாலா கான்ட் எம்எல்ஏவும் கட்சியின் மூத்த தலைவருமான அனில் விஜ், இஸ்ரானா எம்எல்ஏ கிரிஷன் லால் பன்வார், பாட்ஷாபூர் எம்எல்ஏவும் அஹிர் தலைவருமான ராவ் நர்பீர் சிங், பானிபட் புறநகர் எம்எல்ஏவும், ஜாட் தலைவருமான மஹிபால் தண்டா, பரிதாபாத் எம்எல்ஏ விபுல் கோயல், கோஹானா எம்எல்ஏ அரவிந்த் சர்மா, ராடவுர் எம்எல்ஏ ஷியாம் சிங் ராணா , பர்வாலா எம்எல்ஏ ரன்பீர் கங்வா, நர்வானா சட்டமன்ற உறுப்பினர் குமார் பேடி, தோஷம் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ருதி சவுத்ரி, அடேலி எம்எல்ஏ ஆர்த்தி சிங் ராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். டிகான் எம்எல்ஏ ராஜேஷ் நாகர் மற்றும் பல்வால் எம்எல்ஏ கவுரவ் கவுதம்ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அமைச்சர் பதவி ஏற்ற அனைவரும் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றனர். இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிராக் பாஸ்வான், பாஜ தலைவர் ஜேபி நட்டா, 18 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

* யார் இந்த சைனி?
1970ம் ஆண்டு ஜனவரி 25ல் அம்பாலாவின் மிர்சாபூர் மஜ்ரா கிராமத்தில் பிறந்த நயாப்சிங் சைனி, அரியானா பா.ஜவில் பல்வேறு பதவிகளை வகித்தார். 2014ல் நரேன்கர் தொகுதியிலிருந்து முதல்முறையாக போட்டியிட்டு எம்எல்ஏவானார். அப்போது தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019ல் குருஷேத்ரா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 அக்டோபர் மாதம் அரியானா பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். 2024 மார்ச் மாதம் அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு, புதிய முதல்வராக சைனி தேர்வு செய்யப்பட்டார். அக்.5ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்புகளை தாண்டி 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜவை 48 இடங்களில் வெற்றி பெற வைத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தி உள்ளார். அதற்கு பரிசாக மேலிடம் அவரை 2வது முறையாக முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்து உள்ளது.

The post தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Saini ,Ariana CM ,PM Modi ,Amit Shah ,JP Nata ,BJP alliance ,Chandigarh ,Nayabsingh Saini ,Chief Minister ,Ariana ,Modi ,Union Ministers ,JP Natta ,BJP ,Ariana Legislative Assembly ,Ariana Chief Minister ,Dinakaran ,
× RELATED அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி...