- நயப்சிங் சைனி
- அரியானா
- முதல் அமைச்சர்
- பிரதமர் மோடி
- அமைச்சர்
- அமித் ஷா
- சண்டிகர்
- அரியானா முதல்வர்
- மோடி
- மத்திய அமைச்சர்கள்
- பாஜக
- ராஜ்நாத் சிங்
- Aryana
சண்டிகர்: அரியானா முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி இன்று காலை பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா. ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி தேர்தல் நடந்தது. பாஜ, காங்கிரஸ், மாநில கட்சியான ஜேஜேபி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் பெரும்பான்மைக்கு அதிகமாக பாஜ 48 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில், பாஜ 3வது முறையாக அரியானாவில் வெற்றி பெற்றது. அங்கு புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை பாஜ மேற்கொண்டது.
இதற்காக முதல்வர் நயாப் சிங் சைனி, டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் பாஜ மூத்த தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரை தேர்வு செய்வதற்கான பாஜ புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் பஞ்ச்குலாவில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக பங்கேற்றனர். இதில், தற்போதைய முதல்வராக உள்ள நயாப் சிங் சைனி மீண்டும் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை புதிய எம்எல்ஏ கிரிஷன் குமார் பெடி மற்றும் அனில விஜ் ஆகியோர் முன்மொழிந்தனர். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட நயாப் சிங் சைனிக்கு மேலிட பார்வையாளர்கள், சக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜ நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து நயாப் சிங் சைனி, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பஞ்ச்குலாவில் இன்று பகலில் நடந்த விழாவில் முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்,
சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், துணை முதல்வர்கள் அருண் சாவோ, விஜய் சர்மா, ஆந்திரபிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதைத் ெதாடர்ந்து சண்டிகரில் இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது. இதில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்னைகள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
The post அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு: பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு appeared first on Dinakaran.