சென்னை: நாங்கள் ஆய்வு செய்ததில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை. அதிமுக வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறது. சென்னையில் இரவில் அவர்கள் தூங்கும்போது இருந்த வெள்ள நீர் காலையில் வடிந்ததால் மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் கிட்டத்தட்ட 17 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. இதில் சில இடங்களில் கூடுதலாக 30 செ.மீ. மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழைநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.முதலமைச்சர் மக்களைச் சந்தித்தபோது, \\”வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியை, வேளச்சேரியாக திருப்பி தந்தமைக்கு மிகவும் நன்றி\\” என்று கூறினர். நாராயணபுரம் ஏரி பகுதியில் உள்ள மக்களை சந்தித்தப்போது, அங்குள்ள மக்கள் 2008 முதல் இந்தப் பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம் தான் ஒரு சொட்டு மழைநீர் இல்லாமல் முழுவதும் வடிந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ஒவ்வொரு பகுதிகளிலும் கடந்த ஆண்டு பெய்த மழையின் அனுபவத்தின் அடிப்படையில் 990 மின்மோட்டார் பம்புகள், கிட்டத்தட்ட 400 டிராக்டர்கள் வைக்கப்பட்டு, உடனடியாக மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 388 அம்மா உணவகங்களில் நாள்தோறும் சராசரியாக 45,800 நபர்கள் சாப்பிடுகிறார்கள். அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும் என உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று காலை 65,700 நபர்கள் அம்மா உணவகத்தில் உணவருந்தியுள்ளனர்.
2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 400 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டது. திருப்புகழ், தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, சென்னையில் எந்தெந்த இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தற்போது 1,135 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 781 கி.மீ. நீளத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பிற பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தினால்தான் மழைநீர் உடனடியாக வடிந்துள்ளது. இரண்டாம் கட்டமாக ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை, சென்னை குடிநீர் வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் நடைபெறும் பணிகளின் காரணமாக ஆங்காங்கே உள்ள தடுப்புகளின் காரணமாக ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மற்ற அனைத்து இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தினால் மழைநீர் வேகமாக வடிந்துள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.57.76 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு ஆளுமைக் கட்டடம் மற்றும் 24/7 இயங்கக்கூடிய கலைஞர் மாளிகை கட்டப்பட்டு, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாட்டு மையம் தற்பொழுது பல்வேறு புதிய கள தகவல்கள், மழைமானிகள்உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் தரவுகளை நேரடியாக ஒருங்கிணைத்து முழுமையான உட்கட்டமைப்புகள் மற்றும் தரவுகளை கொண்டு தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்வின்போது, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், ஆணையாளர் குமரகுருபரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post நாங்கள் ஆய்வு செய்ததில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை அதிமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறது: எடப்பாடிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி appeared first on Dinakaran.