×
Saravana Stores

இந்தியாவுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிடும் கனடா: ஒத்து ஊதும் இங்கிலாந்து

ஒட்டவா: கனடாவில் நடந்த வன்முறையில் இந்திய அரசை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சீக்கிய சமூகத்தினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென கனடா போலீஸ் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில், இந்திய தூதர் உள்ளிட்ட 6 தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கனடா கடிதம் அனுப்பியது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் இந்தியா, கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், இந்தியாவில் உள்ள கனடா தூதர் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கனடா காவல்துறை (ஆர்சிஎம்பி), நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு உதவியதாக குற்றம்சாட்டியது. இந்நிலையில், கனடா காவல்துறை தலைவர் மைக் டுஹேம் ஒட்டவாவில் நேற்று பேட்டி அளித்த போது, இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு கனடா வாழ் சீக்கியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘கனடாவில் செயல்படும் சட்டவிரோத நெட்வொர்க்குகளை சீர்குலைக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இந்த நெட்வொர்க்குகள் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை நாங்கள் விசாரித்து வரும் நிலையில், சீக்கிய சமூகமும் குரல் கொடுக்க வேண்டும். இந்த விசாரணை தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மக்கள் முன்வந்தால்தான் நாங்கள் அவர்களுக்கு உதவு முடியும். பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக மக்கள் கனடாவுக்கு வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் கடமை. கனடா காவல்துறை புலம்பெயர் இந்தியர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்’’ என்றார்.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் இந்தியா, கனடா இடையேயான உறவு சீர்குலைந்துள்ளது. இதற்கிடையே, கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென இங்கிலாந்தும் வலியுறுத்தி உள்ளது. லண்டனில் நேற்று வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘கனடாவின் தனிப்பட்ட விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறோம். கனடாவின் நீதித்துறையில் இங்கிலாந்து முழு நம்பிக்கை வைத்துள்ளது. இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை தருவது அவசியம். எனவே கனடாவின் சட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பதே சரியான அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும்’’ என்றார்.

* அமெரிக்கா நிலை என்ன?

நிஜ்ஜாரை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பரில் நியூயார்க்கில் மற்றொரு முக்கிய காலிஸ்தான் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதி முறியடிக்கப்பட்டதில் இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க குடியுரிமை பெற்றவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக எடுத்து கொள்வதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்திய அதிகாரிகள் குழு எங்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்’’ என்றார்.

The post இந்தியாவுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிடும் கனடா: ஒத்து ஊதும் இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : Canada ,Sikhs ,England ,Ottawa ,Indian government ,Hardeep ,Khalistan ,India ,UK ,Dinakaran ,
× RELATED கனடாவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த டெஸ்லா கார்: 4 இந்தியர்கள் பலி