×
Saravana Stores

கனமழை பெய்ய வாய்ப்பில்லை சென்னை மாநகரம் தப்பியது: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரை கடக்கிறது

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 250 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து இன்று (17ம் தேதி) காலையில் புதுச்சேரி- தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கும் நெல்லூருக்கும் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையே பெய்யக் கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விலக்கிக் கொள்ளப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து செல்லும்போது சென்னையில் சில இடங்களில் அதிக அளவில் மழை பெய்யும். ஆனால் இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகரம் பெரும் வெள்ள அபாயத்தில் இருந்து தப்பியதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 4 நாட்களாக வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அது இன்று காலை புதுச்சேரி- ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- தென் கிழக்கே சுமார் 117 கிமீ தொலைவிலும், ஆந்திரா, நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 17 கிமீ வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது இன்று (17ம் தேதி) காலை புதுச்சேரி- தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கும் நெல்லூருக்கும் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கையை பொருத்தவரையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், பெய்யும். மேலும், 17ம் தேதியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் நீடித்து வருவதால்தான் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விலக்கிக் கொள்ளப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கையை அறிவிக்கிறோம்.

அதனால் எல்லா இடங்களிலும் 20 செமீ மழை பெய்யும் என்று கூறமுடியாது. இன்று காலை கரைக்கு அருகில் வரும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கெனவே உள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் இருப்பதாலும், கரையை நெருங்குவதாலும், அதன் விளைவுகளை கருத்தில் கொண்டும் தரைக்காற்றின் அளவை வைத்தும் எச்சரிக்கை விடப்படுகிறது. மழைக்காக மட்டும் அல்ல, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்து செல்லும்போது அதிக அளவில் மழை பெய்யும். இது புயலாக மாற வாய்ப்பில்லை. வடகிழக்கு பருவமழைக்கான முன்னறிவிப்பு 3 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இயல்பைவிட கூடுதலாக இந்த பருவத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் வீசும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் இன்று வீசும். அதேபோல, 18ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். வங்கக் கடல் பகுதியை பொருத்தவரையில் இன்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50-60 கிமீ வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புதுச்சேரி – ஆந்திராவின் நெல்லூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சோழவரத்தில் அதிகபட்சமாக 300 மி.மீ. மழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் 5 இடங்களில் அதிகனமழையும், 40 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 300 மிமீ மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையை பொருத்தவரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 3 நாட்களில் 16ம் தேதி வரையில் 138 மிமீ மழை பெய்துள்ளது. இந்த காலத்தில் இயல்பாக 73 மிமீ பெய்ய வேண்டும். இது 94% அதிகமாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கனமழை பெய்ய வாய்ப்பில்லை சென்னை மாநகரம் தப்பியது: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரை கடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,SOUTHWEST BANK SEA REGION ,SOUTHEAST OF ,Puducherry ,
× RELATED சென்னைக்கு 280 கி.மீ கிழக்கே காற்றழுத்த...