- ஹோசூரில் சர்வதேச விமான நிலையம்
- அய்
- அரசு
- இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
- ஹோசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
- தமிழ்நாடு அரசு
- இந்தியா
- ஓசூர் சர்வதேச விமான நிலையம்
- தின மலர்
* சிறப்பு செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமானநிலையம் அமைப்பதற்கான 5 இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு, ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் முதன்மை மாநிலமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. கடந்த 2020ம் ஆண்டு தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில் கடைசி நிலையில் தமிழகம் இருந்தது.
இதன் பின்னர், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகின்றது. அடுத்த 6 ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைவதற்கான தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உலகின் முன்னணி நிறுவனங்களில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்திடும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, துபாய், அமெரிக்கா போன்ற உலகளாவிய சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவற்றால் தொழில் வளர்ச்சியில் உச்சத்தில் மாநிலம் மிளிர்ந்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த அரசால் எடுக்கப்பட்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ‘‘மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை, தமிழ்நாட்டின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக, அங்கு நவீன உட்கட்டமைப்புகளை அமைக்கும் நோக்கில், பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம் என இந்த அரசு கருதுகிறது. அதன்படி, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்’’ என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்டதும் அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக கர்நாடக அரசு, பெங்களூருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளதால் ஓசூரில் விமான நிலையம் அமைக்க அனுமதிக்க கூடாது என்றும், ஏற்கனவே சிவில் ஏவியேஷன் அமைச்சகத்துடன் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் லிமிடெட் போட்ட ஒப்பந்தத்தின் படி, 150 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு புதியவிமானம் வரக்கூடாது என்பதை சுட்டி காண்பித்தது.
இதுகுறித்து சாத்திய கூறுகளை ஆய்வு செய்த விமான நிலைய ஆணையம் ஏற்கனவே, குஜராத்தில் பரோடு, அகமாதாபாத் விமான நிலையங்கள் அருகில் இருப்பதை எடுத்துரைத்து ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கலாம் என தெரிவித்தது. இந்நிலையில் ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளில் இந்திய விமான நிலைய ஆணையம் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓசூருக்கு உள்ளேயும், வெளியேயும் 5 இடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடம் சரியாக இருக்கும் என ஆராயப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் தனியார் ஏர்ஸ்ட்ரிப் நிறுவனமான டனேஜா ஏர்ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட்டும் கைகோர்த்துள்ளது. தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்தின் விரிவான ஆய்வுகள் முடிவடைந்து விட்டன. அதன்படி, 5 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கையை விரைவில் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஏற்றுமதி-இறக்குமதிக்கு எளிய வசதி
ஓசூரில் டிவிஎஸ், டைட்டன், அசோக் லேலண்ட், ஏதர், ஓலா என உள்ளூர் பன்னாட்டு நிறுவனங்கள் கால்தடம் பதித்து உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன. இதுதவிர, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி, ஆட்டோ மொபைல், மொபைல் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை என தொழில் வளர்ச்சியின் முக்கிய இடமாக ஓசூர் நகரம் திகழ்கிறது. அதன்படி, இந்த விமான நிலையம் அமைய பெறும் பட்சத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு பெங்களூரு விமான நிலையத்தை நம்பி இருக்கும் தொழில் நிறுவனங்கள் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதை வரவேற்று உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கின்றன.
* கார்கோ கிராமம் உருவாக்க திட்டம்
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையம் அருகிலேயே தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் கார்கோ கிராமம் எனப்படும் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஓசூர் விமான நிலையத்தில் சரக்கு முனையங்கள் அமைக்கப்பட உள்ளதால், அதனை கையாளுவதற்கான கார்கோ கிராமங்களை அமைக்கும் முடிவில் டிட்கோ உள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை சேமித்து வைக்க முடியும். அந்த அளவிற்கு பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட உள்ளன.
* முட்டுக்கட்டை போடும் பெங்களூரு
ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு பெங்களூரு முட்டுக்கட்டையாக இருப்பது கண்கூடு. ஏற்கனவே, விமான நிலையம் இருக்கும் பெங்களூருவில் இரண்டாவதாக விமான நிலையத்தை அமைக்க கர்நாடக அரசு காய் நகர்த்தி வருகிறது. அதற்காக, பெங்களூருவை சுற்றியுள்ள துமகுரு சாலை, மைசூர் சாலை, குனிகல் சாலை, கனகபுரா சாலை, தொட்டபல்லாபூர் மற்றும் டோப்ஸ்பேட் ஆகிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
* அசுர வளர்ச்சியில் ஓசூர்…
தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களாக விளங்கி வருகின்றன. அவற்றில், அதிகப்படியான ஐடி நிறுவனங்கள் அமைக்கவும், தொழிற்சாலைகள் நிறுவிடவும் ஏதுவான இடமாக ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது. இதுதவிர, ஓசூரின் தட்ப வெட்ப நிலை, போக்குவரத்து, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாகவும் விளங்குகிறது.
The post 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: 5 இடங்களை தேர்வு செய்து அறிக்கை தயார்; அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க ஏஏஐ முடிவு appeared first on Dinakaran.